ஆட்டோ சாரதி கடத்தி தாக்குதல்; அரசியல் கட்சியின் முக்கியஸ்தர் கைது!
பொலன்னறுவை மாவட்டத்தின் பலம் வாய்ந்த அரசியல் கட்சியொன்றின் அமைப்பாளர் என கூறப்படும் நபரொருவர் பொரளை குற்றப்புலனாய்வு பிரிவின் பொலிஸாரால் கடவத்தை ரன்முத்துகல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆட்டோ சாரதியை கடத்த பயன்படுத்தியதாக கூறப்படும் ஜீப் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொரளை பிரதேசத்தை சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியொருவர், கடந்த மாதம் 13ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரியாக காட்டிக்கொண்ட நபரால் அவரது வீட்டில் வைத்து கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் கடவத்தை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், பொலன்னறுவை மாவட்டத்தின் தொகுதி அமைப்பாளர் என பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.