இலங்கையில் செயற்பாடுகளை நிறுத்திய அவுஸ்திரேலிய நிறுவனம்
இலங்கையில் எரிபொருட்களை விற்பனை செய்யும் தமது செயல்பாடுகளை நிறுத்திவிட்டதாக அவுஸ்திரேலிய யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தில் ஏற்பட்ட சிக்கலான சூழ்நிலை காரணமாக அவர்கள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து அந்த நிறுவனம் நாட்டில் இயங்கவில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த அரசாங்கம் நடவடிக்கை
வெளிநாட்டு நிறுவனங்கள் நாட்டினுள் எரிபொருட்களை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கையில் கடந்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
அதன்படி, சீனாவின் சினோபெக் நிறுவனம், அமெரிக்காவின் ஆர்.எம்.பார்க்ஸ், மற்றும் அவஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனங்கள் நாட்டில் செயல்பாடுகளைத் தொடங்கியது.
அதன்படி ஒவ்வொரு நிறுவனத்திற்கும் நாட்டில் தலா 150 எரிபொருள் நிலையங்கள் என்ற வகையில் 450 எரிபொருள் நிலையங்களை இயக்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.
சினோபெக் மற்றும் ஆர்.எம். பார்க்ஸ் தற்போது நாட்டில் எரிபொருள் விற்பனையை எந்த பிரச்சினையும் இல்லாமல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அவுஸ்திரேலிய நிறுவனம் அதன் செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த ஒப்பந்தத்தின்படி, யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் சுமார் 20 ஆண்டுகளுக்கு நாட்டில் எரிபொருள் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்த போதும், ஒரு வருடத்திற்குள் அவர்கள் நாட்டில் செயல்பாடுகளை நிறுத்திவிட்டனர் என்பது விசேட அம்சமாகும்.
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் செயல்பாடுகளை நிறுத்துவதாக கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில் இது தொடர்பாக, அதன் ஊழியர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.