20 ஓவர் உலகக்கிண்ண போட்டி: அதிரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது அவுஸ்திரேலியா அணி
20 ஓவர் உலககிண்ணப் போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் களம் கண்டனர்.
டாஸ் வென்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் ஆசம் ஆகியோர் களமிறங்கினர்.
தொடக்கவீரர் பாபர் அஸாம் 39 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். எனினும்,தொடர்ந்து சிறப்பாக விளையாடிய முகமது ரிஸ்வான் 52 பந்துகளை சந்தித்து 4 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 67 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து 177 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் சார்பில் டேவிட் வார்னர் மற்றும் கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் ஆரோன் பிஞ்ச் ஓட்டங்கள் எடுக்காமல் வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கி அதிரடி காட்டிய மிட்செல் மார்ஸ் 28 (22) ஓட்டங்களும் , அடுத்ததாக களமிறங்கிய சுமித் 5 ஓட்டங்களும் , தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேவிட் வார்னர் 49 (30) ரன்களும், எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்ததாக 6-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட் ஆகியோர் இணை, அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர். முடிவில் ஸ்டோய்னிஸ் 40 (31 பந்துகள்) ஓட்டங்களும் , மேத்யூ வேட் 41 (17 பந்துகள்) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இறுதியில் அவுஸ்திரேலியா அணி 19 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷதப் கான் 4 விக்கெட்டுகளும், ஷகின் அப்ரிதி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் 20 ஓவர் உலக கிண்ண போட்டியில் அவுஸ்திரேலியா அணி திரில் வெற்றிபெற்று இறுதிபோட்டிக்கு தகுதிபெற்றது.
இதன்படி வருகிற 14ஆம் திகதி நடக்கும் மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியுடன், அவுஸ்திரேலியாஅணி மோத உள்ளது.