ஆஸ்திரேலியா தேர்தலில் நட்சத்திர நாயகியாக அலி பிரான்ஸ்
ஆஸ்திரேலியாவின் 48 ஆவது நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியுள்ள லேபர் கட்சியின் பெருவெற்றியானது பல அதிசயங்களை நிகழ்த்தியிருந்தாலும், ஆளும் கட்சியின் இமாலய வெற்றியின் நட்சத்திர நாயகி அலி பிரான்ஸ் என்பவர்தான்.
லிபரல் கட்சியின் முதன்மை வேட்பாளர் பீற்றர் டட்டன் என்ற இரும்பு மனிதன் சுமார் 24 வருடங்களாகத் தக்கவைத்திருந்த அவரது சொந்தத் தொகுதியின் வெற்றியைத் தட்டிப்பறித்து, அவரை நாடாளுமன்றத்திலிருந்தே வெளியேற்றியிருக்கிறார் அலி பிரான்ஸ் என்ற 51 வயதுப் பெண்மணி.
அதாவது, பிரதமர் பதவிக்கான வேட்பாளரோ - நடப்பு அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர்களோ - தங்களது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைந்தால், அவர்கள் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற ஆஸ்திரேலியத் தேர்தல் விதியின் பிரகாரம் தூக்கியெறியப்பட்டிருக்கிறார் பீற்றர் டட்டன்.
பீற்றர் டட்டனைத் தோற்கடித்துப் பெற்றுள்ள வெற்றியும் அரசியல் பயணமும் தனிப்பட்ட வாழ்க்கையும் அலி பிரான்ஸிற்கு இலகுவாக அமைந்துவிடவில்லை.
தொடர்ச்சியான தோல்விகளும் தனிப்பட்ட வாழ்வில் பெரிய காயங்களும் சாவுகளும் நிறைந்த வாழ்வு அலி பிரான்ஸினுடையது.
2011 ஆம் ஆண்டு பிறிஸ்பன் அங்காடியொன்றில் பொருட்களை வாங்கிக்கொண்டு தனது மகனைப் பிறாமில் தள்ளிக்கொண்டு வெளியே வந்தபோது, அங்காடிக்கு வெளியே 88 வயது முதியவர் ஓட்டிவந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, அலி பிரான்ஸ் மீது பாய, தான் அடியுண்டாலும் பரவாயில்லை, தனது மகனைக் காப்பாற்றிவிடவேண்டும் என்று மகனிருந்த பிறாமைத் தூரத் தள்ளிவிட்டார்.
வேகமாக வந்த கார் அலி பிரான்ஸ் மீது பாய்ந்து, அவரைச் சுவர் ஒன்றோடு சேர்த்து அறைந்தது. அவரது இடது காலின் நாடி அறுந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். தக்க சமயத்தில் அங்கு ஓடிவந்த இருவர், தங்களது சேர்ட்டைக் கழற்றிக் கிழித்துக் காயத்துக்குக் கட்டுப்போட்டதால் உயிர் தப்பினார்.
மயிரிழையில் உயிர் தப்பிய அவரது மகன் ஸக், தொலைவில் பிராமோடு சென்று கவிழ்ந்து, நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்றிற்கு அடியில் சென்று அகப்பட்டுக்கொண்டார். விபத்தை நேரடியாகக் கண்ட தாயொருவர், தனது கைக்குழந்தையை நிலத்தில் கிடத்திவிட்டு, காருக்கு அடியிலிருந்து ஸக்கை இழுத்தெடுத்து காப்பாற்றினார்.
ஸக் எந்தக் காயமுமின்றி உயிர் தப்பிக்கொண்டார். இந்த விபத்தில் படுகாயமடைந்த அலி பிரான்ஸின் இடது கால் முற்றாக அகற்றப்பட்டது.
அலி பிரான்ஸ் தென்னாபிரிக்காவில் பிறந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்து, கல்வி கற்று, ஊடகவியலாளராகப் பணியாற்றியவர். அரசியல் என்பது அவரது தகப்பன் வழியாகவும் தொழில் வழியாகவும் அவருக்குள் ஊறிக்கிடந்தது.
2019 ஆம் ஆண்டு, முதல் கணவரிடமிருந்து விவகாரத்தானபோது, அலி பிரான்ஸ் நேரடி அரசியலுக்குள் நுழைய முடிவெடுத்தார். குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் பீற்றர் டட்டனின் டிக்ஸன் தொகுதியில் லேபர் கட்சி சார்பில் களமிறங்கினார்.
முதலாவது தேர்தலில் தோல்வியடைந்தார். 2022 ஆம் ஆண்டு தேர்தலிலும் டட்டனுக்கு எதிரான போட்டியில் டிக்ஸன் தொகுதியில் தோல்வியடைந்தார்.
பத்து வருடங்களுக்கு முன்னர் விபத்தில் காலைக் காவுகொண்டதோடு சற்று ஓய்வெடுத்த அவரது விதி, 2022 இல் மீண்டும் கலையாடத் தொடங்கியது. மூத்த மகன் ஹென்றியை புற்றுநோய் தாக்கியது. சம நேரத்தில் முன்னாள் கணவரும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டார்.
2023 ஆம் ஆண்டு அலி பிரான்ஸின் முன்னாள் கணவர் புற்றுநோயினால் காலமானார். கடந்த வருடம் மகன் ஹென்றியும் புற்றுநோயால் காலமானார்.
ஆறு மாத இடைவெளியில் முன்னாள் கணவரையும் மகனையும் இழந்த வலியும் விரக்தியும் தன்னைச் சூழ்ந்து கிடந்தாலும், 2025 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது தடவையாக பீற்றர் டட்டனை எதிர்த்துப் போட்டியிடுவதற்கு அலி பிரான்ஸ் உறுதியோடு எழுந்தார்.
ஒற்றைக் காலோடும் ஓர்மத்தோடும் டிக்ஸன் தொகுதியெங்கும் பிரச்சாரத்திற்காக ஏறி இறங்கினார். கிட்டத்தட்டக் கால் நூற்றாண்டு காலமாக தனது சொந்தத் தொகுதியில் கோலோச்சிக்கொண்டிருந்த லிபரல் கட்சியின் அதி சக்தி வாய்ந்த பீற்றர் டட்டனை வீழ்த்துவது என்பது லேசான காரியமல்ல என்பது லேபர் கட்சியனருக்கும் தெரிந்ததுதான்.
இம்முறைத் தேர்தல் என்பது லேபருக்கு அநேக இடங்களில் வெற்றியை ஈட்டிக்கொடுக்கும் என்பது முன்னரே ஊகிக்கக்கூடியதாயிருந்தபோதும், பீற்றர் டட்டன் என்ற ஆஸ்திரேலியாவின் இரும்பு மனிதனை தோற்கடிப்பது என்பதெல்லாம் அவ்வளவு எளிதாகியிருக்கவில்லை.
ஆனால், அலி பிரான்ஸ் ஆஸ்திரேலிய அரசியலில் தனது வெற்றியினால் மாத்திரமல்லாமல், எதிரிக்கு இழைத்த தோல்வியின் மூலமும் அழிக்கமுடியாத வெற்றித்தடத்தைப் பதித்தார். தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்த ஒரு மணி நேரத்திலேயே டட்டனின் தோல்வி தொலைக்காட்சியில் மின்னத் தொடங்கியது.
தேசிய நாயகியாக அலி பிரான்ஸின் பெயர் திரையெங்கும் பளிச்சிடத்தொடங்கியது. அலி பிரான்ஸ், ஆறு வருடப்போராட்டத்தினால் கிடைத்த சாதனை வெற்றியை இரு கைகளில் ஏந்திக்கொண்டு எதிர்வரும் ஒன்பதாம் திகதி கன்பரா நாடாளுமன்றத்திற்குள் நுழையப்போகிறார்.
ஆஸ்திரேலிய அரசியல் வரலாற்றில் பிரதமர் பதவிக்காகப் போட்டியிட்டவர்கள் தங்களது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைந்தது, இதுவரை மூன்று தடவைகளே இடம்பெற்றிருக்கின்றன. முதன் முதலாக 1929 இல் இடம்பெற்றது.
அதன் பின்னர் 2007 இல் முன்னாள் பிரதமர் ஜோன் ஹவாடிற்கு ஏற்பட்ட படுதோல்வியுடன் அவர் அரசியலில் இருந்தே விலகினார். தற்போது பீற்றர் டட்டனுக்கு ஏற்பட்டுள்ளது.