பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல் ; மதுபோதையில் அரங்கேறிய அடாவடி
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் 30 மற்றும் 31 வயதுடையவர்கள் எனவும், அஸ்கிரிய, கொதட்டுவ மற்றும் கண்டி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியல் உத்தரவு
இவர்களில் மூன்று சந்தேகநபர்கள் நேற்று (15) கிரிபத்கும்புர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றைய நபர் இன்று (16) பேராதனை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் வெலிஹிரிய பிரதேசத்தில் உள்ள ஓடை ஒன்றில் நீராடச் சென்றிருந்த வேளையில், அவ்விடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த குழுவொன்றுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான நான்கு மாணவர்கள் தற்போது பேராதனை வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சந்தேகநபர்கள் இன்று (16) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.