பிணையில் வந்தவர் செய்த கொடூரம்; பரிதாபமாக உயிரிழந்த பெண்!
வெலிக்கடை – ராஜகிரிய வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் 71 வயதுடைய பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த படுகொலை சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், உயிரிழந்த பெண் வீட்டில் தனியாக வசிப்பதையும், அவரது உடன்பிறப்புகள் வெளிநாட்டில் வசிப்பதையும் உறுதி செய்த சந்தேக நபர் கடந்த 25 ஆம் திகதி அதிகாலை 4:30 மணியளவில் வீட்டின் கூரை ஓடுகளை அகற்றி வீட்டிற்குள் நுழைந்தார்.
திருடன் நுழைந்ததை அறிந்த பெண் சத்தமிட்ட நிலையில் அவரின் கழுத்தை நெரித்து கொன்று விட்டு சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார். சத்தம் கேட்ட அயலவர்கள் பெண்ணின் வீட்டிற்கு சென்று கூப்பிட்டபோது அவர் பதில் அளிக்காததால் சந்தேகமடைந்த அயலவர்கள் பொலிசாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து வெலிகடை பொலிஸார் அங்கு சென்று பார்த்தபோது , குறித்த பெண் உயிரிழந்த நிலையில், அவரின் சகோதரி 25,000 ரூபாவை சம்பவத்தின் முந்தைய நாளில் குறித்த பெண்ணிடம் கொடுத்த நிலையில் அந்த பணம் காணாமல் போனமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அந்த பணத்தை கொள்ளையிடும் முயற்சியில் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் ஊகித்தனர். உயிரிழந்த பெண்ணின் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெறப்பட்ட சி.சி.ரி.வி காட்சிகளினடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்.
ராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த 53 வயதான சந்தேக நபரை நேற்று பொலிஸார் கைதுசெய்ததுடன் சந்தேக நபர் கடுவெல, கொரத்தோட்டவை சேர்ந்தவர். சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட் விசாரணையில், குறித்த வீட்டின் கூரையின் வழியாக வீட்டிற்குள் புகுந்து பெண்னை கொலை செய்ததன் பின்னர், பணத்தை திருடியமை தெரியவந்துள்ளது.
மேலும் கைதான சந்தேக நபர் போதைக்கு அடிமையானவர் என்றும், போதைப்பொருள் வாங்க பணம் தேவையென்பதால் அந்த கொலையை செய்ததாக தெரிவித்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை சந்தேகநபர் முன்னதாக அதுருகிரிய பொலிஸ் பிரிவில் இதே போன்று கொலையொன்றை செய்து நகை கொள்ளையிட்டு பறித்துச் சென்றமைக்காக அதுருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், 4 வருடங்கள் விளக்கமறியலில் இருந்த பின்னர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், கைதான சந்தேக நபரை இன்று புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.