வீராங்கனைகள் திருமணம் செய்ய கவர்ச்சியற்றவர்கள்; விமர்சித்த பெண் அதிபர்; பலரும் கண்டனம்
தட்டையான மார்பகங்களை கொண்டதால் கால்பந்து வீராங்கனைகள், திருமணம் செய்துகொள்ள கவர்ச்சியற்றவர்கள் என தான்சானியாவின் முதல் பெண் ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹாசன் (Samia Suluhu Hassan) தெரிவித்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பிராந்திய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் தேசிய ஆண்கள் அணியின் வெற்றிபெற்றதை கொண்டாடும் விழாவில் தான்சானியாவின் முதல் பெண் ஜனாதிபதியான சாமியா சுலுஹு ஹாசன் (Samia Suluhu Hassan) கலந்துகொண்டார்.
இதன்போது பேசிய அவர்,
"கால்பந்து வீராங்கனைகளுக்கு மார்பு தட்டையாக இருப்பதால், அவர்கள் ஆண்கள் போன்று உள்ளனர் கவர்ச்சிகரமான ஒருவரை திருமணம் செய்து கொள்ள நீங்கள் விரும்புவீர்கள். நல்ல குணங்களைக் கொண்ட ஒரு பெண்ணை விரும்புவீர்கள். ஆனால், பெண் கால்பந்து வீரர்களுக்கு அந்த குணங்கள் மறைந்துவிட்டதாக அவர் கூறினார்.
அத்துடன் இன்று அவர்கள் நாட்டிற்கு கோப்பைகளை வென்று வரும்போது எங்களை பெருமைப்படுத்துகிறார்கள், ஆனால் அவர்களின் எதிர்கால வாழ்க்கையை நாம் நினைத்தால் மோசமாக உள்ளது. அவர்களின் கால்கள் விளையாட முடியாமல் சோர்வடையும் போது, அவர்களுக்கு விளையாடுவதற்கான உடல்நலம் இல்லாதபோது, என்ன வாழ்க்கை வாழ்வார்கள்? திருமண வாழ்க்கை அவர்களுக்கு ஒரு கனவு போன்றது.
ஏனென்றால் உங்களில் ஒருவர் அவர்களை மனைவியாக வீட்டிற்கு அழைத்துச் சென்றாலும், அவர்கள் ஒரு பெண்ணா அல்லது ஆணா என்று உங்கள் தாய் கேட்பார்." என்றும் சர்ச்சையான கருத்தை அவர் கூறினார்.
இந்நிலையில் ஹாசனின்(Samia Suluhu Hassan) இந்த சர்ச்சைக்குறிய கருத்துக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசியுள்ள தான்சானியா எதிர்க்கட்சி கட்சி மகளிர் பிரிவின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான கேத்தரின் ரூஜ் (Catherine Rouge), "பெண் கால்பந்து வீரர்கள் குறித்து ஜனாதிபதியின் கருத்து அனைத்து பெண்களையும் அவமானப்படுத்தும் வகையில் உள்ளதாக கூறினார்.
அதேவேளை "எல்லா பெண்களும் மரியாதைக்கு உரியவர்கள். பெண் ஜனாதிபதி என அனைவராலும் வாழ்த்தப்படும் சுலுஹு சலாமியா, பெண் கால்பந்து வீரர்களை அவமானப்படுத்தும் வகையில் பேசி இருக்கிறார். ஆப்பிரிக்க பெண்கள் தலைவர்கள் குழுமம் பெருமைப்பட்டுக்கொள்ளட்டும்" என தான்சானியா மாற்றத்துக்கான சிவில் சமூக குழுவின் நிறுவனர் மரியா சருங்கி ட்விட்டரில் விமர்சித்து உள்ளார்.
இதேவேளை தான்சானியாவின் முன்னாள் ஜனாதிபதி ஜான் மகஃபுலியின் திடீர் மரணத்திற்குப் பின்னர் கடந்த மார்ச் மாதம் சுலுஹு சலாமியா (Suluhu Samia) ஜனாதிபதியாக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.