நலம் தரும் நவராத்திரியின் 2ம் நாள் வழிபாடு பற்றிய முழு விவரம்
நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்கையின் வடிவமாக கருதி நாம் வழிபடுகிறோம் இந்த ஆண்டு துர்கை வழிபாட்டிற்குரிய நவராத்திரியின் இரண்டாம் நாள், துர்கைக்கு மிகவும் உகந்த செவ்வாய்கிழமையில் வருவது மிகவும் சிறப்புக்குரியதாகும்.
அது மட்டுமல்ல, நவராத்திரியின் இரண்டாம் நாளான செப்டம்பர் 23ம் திகதி பகல் 2.40 மணிக்கு பிறகு சித்திரை நட்சத்திரம் துவங்கி விடுகிறது.
சித்திரை நட்சத்திரத்திற்குரிய தெய்வம் செவ்வாய் பகவான். அவருக்குரிய கிழமை மற்றும் நட்சத்திரம் இணைந்து வரும் நாளில், நவகிரகங்களையும் தனக்குள் அடக்கியவளாக காட்சி தரும் துர்கையை வழிபடுவது மிக மிக அற்புதமான பலன்களை தரக் கூடியதாகும்.
நவராத்திரியின் இரண்டாம் நாளில் அம்பிகையை, ராஜ ராஜேஸ்வரியாக அலங்காரம் செய்து வழிபட வேண்டும். சக்தி வழிபாட்டில் மிகவும் முக்கியமான தெய்வமாக கருதப்படுபவள் ராஜ ராஜேஸ்வரி.
அரசர்களுக்கு எல்லாம் தலைவியாக விளங்கக் கூடியவள் என்பது இந்த திருநாமத்தின் பொருள். தலையில் பிறை நிலவையும், கையில் கரும்பினையும் ஏந்தி, ஸ்ரீசக்ர பீடத்தின் மீது அமர்ந்து அருளக் கூடியவள் ராஜராஜேஸ்வரி.
செல்வங்களையும், கேட்கும் வரங்கள், ஆசிகளை அருளும் தெய்வமாக ராஜராஜேஸ்வரி வழிபடப்படுகிறாள். பார்வதி தேவியின் மிக முக்கியமான வடிவங்களில் ஒன்றான ராஜராஜேஸ்வரியை வழிபட்டால் கேட்டும் வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நவராத்திரியின் இரண்டாம் நாளில் ராஜராஜேஸ்வரியை எவ்வாறு வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நவராத்திரி 2ம் நாள் வழிபாடு :
கோலம் - கட்டம் வகை கோலம்
மலர் - முல்லை
இலை - மருவு
நைவேத்தியம் - புளியோதரை
தானியம் - வேர்க்கடலை சுண்டல்
பழம் - மாம்பழம்
அம்பிகையின் வடிவங்களில் மிகவும் சக்தி வாய்ந்த வடிவமாக கருதப்படுபவள் துர்கை.
மனதிற்கு தைரியத்தையும், வாழ்க்கையில் வெற்றியையும், தடைகளை விலக்கி மங்களங்களையும் தரக் கூடியவள் துர்கா தேவி தான். பக்தர்கள் வேண்டும் வரங்களை அளித்து, அவர்களின் துன்பங்களை விரைவில் போக்கக் கூடிய தெய்வமாகவும் துர்கை விளங்குகிறார்.
கிரக தோஷங்கள், திருமணம், குழந்தை, குடும்ப ஒற்றுமை, வருமானம், பிரச்சனை என என்ன கஷ்டமாக இருந்தாலும் துர்கையிடம் சென்று முறையிட்டால் அதற்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.
மனதில் பயம், தடுமாற்றம், குழப்பம் உள்ளவர்கள் துர்கை அம்மன் சன்னதிக்கு சென்று, அமைதியாக அமர்ந்து அவளின் திருமுகத்தை பார்த்துக் கொண்டே இருந்தாலே மனம் தெளிவடையும். தைரியம் பிறக்கும்.
மந்திரம் சொல்வது, விளக்கேற்றுவது என எந்த வழிபாடும் செய்யாமல், துர்கையை தரிசனம் செய்தாலே நமக்குள் மாற்றம் ஏற்படுவதை உணர முடியும். இத்தகைய ஆற்றலை துர்கையின் சன்னதியில் மட்டுமே பெற முடியும்.