ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் அசாத் மௌலானா விசாரிக்க வேண்டும்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்துக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சுயாதீனமாக விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் எனக் கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்தார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் செயலாளர் அசாத் மௌலானாவை விசாரிக்குமாறு அருட்தந்தை சிறில் காமினி கூறினார்.
மௌலானாவை நாடு கடத்த வேண்டும் அல்லது வேறு வழிகளில் விசாரிக்க வேண்டும் எனவும் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
செனல் 4 கிளிப் சுரேஷ் சாலே மற்றும் மௌலானா இருவரையும் குறிப்பிடுகிறது. இருப்பினும் இன்றுவரை சாலே மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளார். எனவே மௌலானாவையும் விசாரிப்பது அவசியம் என அருட்தந்தை சுட்டிக்காட்டினார்.
விசாரணைகள் நிறைவடைவதற்கு முன்னர் தீர்மானங்களை எடுக்கக் கூடாது எனத் தெரிவித்த அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவின் அண்மையில் ஊடகங்களில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பிலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய நடவடிக்கை இருப்பதாகக் குற்றம் சாட்டியமை தொடர்பிலும் சுட்டிக்காட்டினார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடியும் வரை ஒருவர் பொறுமையாக இருக்க வேண்டும் என அருட்தந்தை மேலும் கூறினார்.
அரசாங்கம் மேற்கொள்ளும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் சில முன்னேற்றம் இருக்கும் என்று கத்தோலிக்க திருச்சபை நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், தற்போதைய அரசாங்கத்தை அது முழுமையாக நம்பவில்லை என்றும் பெர்னாண்டோ கூறினார்.
தற்போதைய அரசாங்கத்தை நம்புவதாக நூறு சதவீதம் சொல்ல முடியாத போதிலும் விசாரணைகள் சரியான திசையில் நகரும் என்று கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ நம்பிக்கை வெளியிட்டார்.