இலங்கை மீனவர் நலனுக்காக பாடுப்பட்ட அருளானந்தம் காலமானார்!
இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபட்டு வந்த மீனவப் போராளி பாம்பன் யு.அருளானந்தத்தின் திடீரென மரணம் மீனவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கடந்த 50 ஆண்டுகளாக மீனவர் உரிமைக்காகவும், நலத்துக்காகவும் போராடி வந்தவர்தான் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த யு.அருளானந்தம்.
இரு நாட்டு கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் பற்றி ஆட்சியாளர்களுக்கும் சர்வதேச ஊடகங்களுக்கும் தெளிவாக வெளிப்படுத்தியவர்.
இந்திய எல்லைக்குள் கைதாகும் இலங்கை மீனவர்களின் நலனுக்காகவும் மிகவும் பாடுப்பட்டவர். மீனவர் பிரச்சனைகளுக்காக மட்டுமல்லாமல் பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்காகப் பாடுபடும் ஜனநாயக அமைப்புகளோடு இணைந்து போராடியவர்.
யு.அருளானந்தம் நிரபராதி மீனவர் சங்கத் தலைவராகவும், தீவு மீனவ சங்கத் தலைவராகவும், தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைபின் ஒருங்கிணைப்பாளராகவும் சேவையாற்றியுள்ளார்.
மீனவப் போராளி பாம்பன் யு.அருளானந்தத்தின் இந்த திடீர் மறைவு தமிழகம் முழுவதுமுள்ள மீனவர்கள் மட்டுமல்லாது, இலங்கை மீனவர்களை மிகவும் . கவலையடைய செய்துள்ளது. மேலும் இவருடைய பலரும் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.
வைகோ (Vaiko) தன் இரங்கல் செய்தியில்,
"இராமேஸ்வரம் மீனவர்களின் பாதுகாவலர் என் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய நண்பர், அருளானந்தம் மறைந்த செய்தி அறிந்து வருந்துகின்றேன். 80-களின் தொடக்கத்தில், இலங்கைக் கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதை எதிர்த்துக் களம் புகுந்தார். தீவு மீனவர் சங்கத்தைத் தொடங்கினார். தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக மீனவர்களின் பாதுகாப்பான நல்வாழ்வு ஒன்றையே தன் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டு உழைத்தார்.
இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்து யாழ்.நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதெல்லாம் அங்கே சென்று அவர்களுக்காக வழக்குரைஞர்களை நியமித்து விடுவித்தவர், அதேபோல, ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இலங்கை மீனவர்களுக்கும் வழக்குரைஞர்களை ஏற்பாடு செய்து அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப உதவியாக இருந்தார்.
இதேவேளை இலங்கை நீதிமன்றம் இராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தபோது அதை எதிர்த்துக் கடுமையாகப் போராடினார்.என அவரை பற்றி உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.