கைதான நிஷாந்த ரணதுங்க பிணையில் செல்ல அனுமதி
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவினால் இன்று (10) காலை கைது செய்யப்பட்ட தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் முன்னாள் தலைவர் நிஷாந்த ரணதுங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இதன்படி, சந்தேகநபரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதித்தார்.
அதனைத் தொடர்ந்து, தொடர்புடைய வழக்கினை ஜனவரி மாதம் 19 ஆம் திகதி அழைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், நீர் திட்டமொன்றில் பணியாற்றிய ஊழியர்கள் இருவரைத் தனது தனிப்பட்ட சாரதிகளாகப் பயன்படுத்தியமை மற்றும் அதன் பாதுகாப்பு அதிகாரிகளைத் தனது தனிப்பட்ட வீட்டின் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தியமை மூலம் ஊழல் புரிந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் நிஷாந்த ரணதுங்க கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.