பாடசாலை மாணவர்களுக்கு 'மதன மோதகம் விற்பனை; இளைஞர் கைது
மஸ்கெலியா நகரில் பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து, அனுமதியின்றி கஞ்சா கலந்த 'மதன மோதகம்' மாத்திரைகளை விற்பனை செய்து வந்த ஆயுர்வேதக் கடை உரிமையாளர் மஸ்கெலியா குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து கஞ்சா கலந்த 386 மதன மோதகம் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக இச்சோதனையை வழிநடத்திய பொலிஸ் சார்ஜென்ட் சமீரா (35630) தெரிவித்தார்.

மஸ்கெலியாப் பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து நீண்டகாலமாக இச்சட்டவிரோத நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், குறித்த ஆயுர்வேதக் கடையில் திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் தியதலாவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் எனத் தெரிவித்துள்ள மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எஸ். புஷ்பகுமார, சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.