முடிந்தால் பிமல் ரத்நாயக்கவை கைது செய்யுங்கள் ; ஜனாதிபதி அநுரவிற்கு விடுக்கப்பட்ட சவால்
பழைய திருடர்களை பிடிப்பதில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வேலைபழுவாக இருப்பதால் புதிய திருடர்களை ஆணைக்குழு அலட்சியம் செய்கிறது.
அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, வசந்த சமரசிங்கவுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டபய ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் சாதனையை முறியடிக்க வேண்டும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் நேற்று (17) முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு கடந்த மாதம் 2 ஆம் திகதி முறைப்பாடளித்தோம். ஆனால் இதுவரையில் அந்த முறைப்பாடு குறித்து எவ்வித விசாரணைகளையும் ஆணைக்குழு மேற்கொள்ளவில்லை.
இந்த கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் பிரதி அமைச்சர் ஜனித் ருவான் கொடித்துவக்கு ஆகியோர் இந்த கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் தாம் நன்கு அறிவோம் என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டார்கள்.
ஆனால் ஜனாதிபதி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு அறிக்கை சமர்ப்பித்ததன் பின்னர் ஆரம்பத்தில் குறிப்பிட்ட கருத்துக்கு மாற்றீடாக தற்போது பேசுகிறார்கள். துறைமுக அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பணிப்புக்கு அமைவாகவே இந்த 323 கொள்கலன்களும் விடுவிக்கப்பட்டதாக சுங்கத்திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் சீவலி அருட்கொட குறிப்பிட்டார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முறையாக செயற்படுமாயின் பிமல் ரத்நாயக்கவை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். பழைய திருடர்களை பிடிப்பதில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வேலைபழுவாக இருப்பதால் புதிய திருடர்களை ஆணைக்குழு அலட்சியம் செய்கிறது. சோளம் வழங்கியவர்கள், கெரம் போட் விநியோகத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
ஆனால் 323 கொள்கலன்களை விடுவித்தவர்களால் நாட்டுக்கு ஏற்பட்ட நிதி இழப்பு தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த அரசாங்கத்தில் ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கு சட்ட விலக்களிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவின் சகோதரருக்கு எதிராக 2021 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் ஆட்சியின் போது தான் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
ஆகவே ஊழல் ஒழிப்புக்கு எதிரான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்குமாயின் தமது அரசாங்கத்தின் ஊழல்வாதிகளுக்கு எதிராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.