தமிழ் மொழி பயிற்சிக்கு சென்ற இராணுவ அதிகாரி திடீர் உயிரிழப்பு
தமிழ் மொழி மூலப் பயிற்சிக்காக வருகைத் தந்த இராணுவ சார்ஜன்ட் மேஜர் ஒருவர், இராணுவ முகாமில், திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் வெல்லவாயவில் இடம்பெற்றுள்ளது. வெல்லவாய இராணுவ முகாமில் நேற்று மாலை அவரது அறையிலேயே உயிரிழந்துள்ளார் என வெல்லவாய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் 53ஆவது படையணியின் 6ஆவது பாபல ரெஜிமென்ட்டின் மிஹிந்தலை முகாமில் கடமையாற்றிய 49 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இராணுவ சார்ஜன்ட் மேஜர் உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் குழுவொன்று, 2 மாதங்களுக்கு முன்னர், தமிழ் மொழி மூலப் பயிற்சிக்காக வெல்லவாய- வருணகம இராணுவ முகாமுக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (16) இரவு நித்திரைக்குச் சென்ற மேஜர், நேற்று மாலை வரை அறையிலிருந்து வெளியே வராமையால், அறைக்கு சென்று பார்த்த போது கட்டிலுக்கு அருகில் விழுந்திருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து , மரண விசாரணைகள் இன்று வெல்லவாய ஆரம்ப வைத்தியசாலையில் இடம்பெறும் என வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.