இலங்கையில் ஆயுதப்படைகள் தயார் நிலையில்!
இலங்கையில் தேர்தல் தினத்தன்று ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றும், சகல பாதுகாப்பு நடவடிக்கைகளும் அமுலில் உள்ளதாகவும், தேவைப்பட்டால் ஆயுதப்படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந் நிலையில், பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க கூறுகையில்,
ஜனாதிபதியிடம் மாத்திரமே உள்ளது
தேர்தல் காலத்தில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் (STF) பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள். தேவைப்பட்டால் பொலிஸிற்கு ஆதரவாக முப்படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.
செப்டெம்பர் 21 ஆம் திகதி வாக்களிப்பதன் பின்னர் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் எதுவும் இல்லை என குணதிலக்க தெரிவித்தார். அதேசமயம் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் தீர்மானம் ஜனாதிபதியிடம் மாத்திரமே உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாரிய அசம்பாவிதங்கள் எதுவுமின்றி இதுவரை நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட தேர்தல் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸார் தொடர்ந்தும் தமது முயற்சிகளை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.