அர்ச்சுனா எம்.பியின் நாடாளுமன்ற கருத்து ; முஸ்லிம் எம்.பி க்கள் சபையில் வலியுறுத்து
இஸ்லாமிய விவாக விவாகரத்து சட்டம் தொடர்பில் இராமநாதன் அர்ச்சுனா எம்பி சனிக்கிழமை பாராளுமன்ற சபையில் தெரிவித்த கூற்றிலிருந்து அவரின் நிலைப்பாட்டில் இருந்து மாற வேண்டும் என எதிர்க்கட்சி முஸ்லிம் எம்.பிக்கள் சபையில் வலிறுயுத்தினர்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
அவரின் இந்த கூற்று தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவி்கக்கும் அபாயம் இருக்கிறது.
அம்பாறை மாவட்ட உறுப்பினர் மொகமட் தாஹிர் உரையாற்றுகையில், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா எனது நல்ல நண்பர். அவர் அண்மையில் எமது மார்க்கத்துக்குள் மூக்கை நுழைத்து விட்டார்.
அவர் அதைத் தெரிந்து செய்தாரா அல்லது விளம்பரத்திற்காக செய்தாரா என்பது புரியவில்லை. அவரை நாங்கள் தண்டிக்க முடியாது என்றாலும் அவருக்கு எமது மார்க்கத்தைப் பற்றி சொல்ல வேண்டிய தேவை உள்ளது. நாட்டில் ஒட்டுமொத்த மக்களுக்கும் நாம் கூறிக் கொள்ளும் விடயம் என்னவென்றால், நாங்கள் புனித இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டுள்ளோம்.
எங்களது மார்க்கம் பூரணப்படுத்தப்பட்டு விட்டது. அதிலே எவரும் மூக்கை நுழைத்து மாற்றங்களை செய்ய முடியாது. ஒரு மனிதனுடைய கருவறை பிறப்பிலிருந்து, மரணிக்கும் வரைக்கும் வரை அனைத்து விடயங்களையும் அல் குர் ஆனும் முகம்மது நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை முறையும் எங்களுக்கு கற்றுத் தந்துள்ளன.
அதில் ஆணாக இருந்தால் எவ்வாறு அல்லது பெண்ணாக இருந்தால் எவ்வாறு வாழ வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
எனது நண்பர் அர்ச்சுனா படித்தவர் பண்புள்ளவர். அவர் ஒரு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அல்ல. மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்.
அந்த வகையில் மக்கள் ஆதரவைப் பெற்று வந்தவர் இந்த நாட்டிலும் அனைத்து மக்களோடும் இணைந்து செயற்பட வேண்டும். அவரது இந்த கூற்றுக்களை அவர் வாபஸ் பெறுவார் அல்லது அந்த நிலைப்பாட்டில் இருந்து அவர் மாற வேண்டும் என்றார்.
மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உரையாற்றுகையில், முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பாக அவ்வப்போது பேசிவருகின்றன. அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்ும் என்றால் அதுதொடர்பில் முஸ்லிம் எம்.பிக்கள், உலமாக்கள் அரசாங்க தரப்பினர் அதனை கலந்ரையாடி மேற்கொள்ள முடியும்.
அவ்வாறு இல்லாமல் முஸ்லிம் சமூகத்தை தூண்டும் வகையில் அது தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கு இடமளிக்க கூடாது. இது தமிழ் ,முஸ்லிம் மக்களிடையில் பிளவை ஏற்படுத்தக்கூடும். ஒரு சமூகத்தின் மார்க்க விடயங்கள் தொடர்பில் இந்த சபையில் பேசுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சலீம் நளீம் உரையாற்றுகையில்,
எமது மாக்க விடயங்களில் அச்சுனா எம்பி மூக்கை நுழைக்க கூடாது. எமது மார்க்கத்தில் முஸ்லிம் பெண்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் எங்களுக்கு தெரியும்.
எமது மார்க்கத்தில் பெண் எப்படி நடத்தப்பட வேண்டும் பெண்களுக்கான சட்டம் என்றால் என்ன ,விவாக சட்டம் என்றால் என்ன விவாகரத்து சட்டம் என்றால் என்ன என அனைத்து சட்டங்களும் தெளிவான முறையில் வகுத்த மார்க்கம்தான் இஸ்லாம் மார்க்கம்.
அவர் சமூக வலைத்தளங்களில் தான் பெயர் ,புகழ் பெற வேண்டும் என்பதற்காக எமது மார்க்கத்தை கொச்சைப்படுத்தி பேசுகின்ற நிலையை நாம் காண்கின்றோம்.
இவர் தனது பைத்தியத்தை போக்க நல்ல வைத்தியத்தை பெற வேண்டும். அவரை சபாநாயகர் புத்தி சொல்லி வழிநடத்த வேண்டும் என்றார். இறுதியில் எழுந்த அச்சுனா, எம்பி இதற்கு பதிலளிக்கையில், பொதுவான மக்களிடமிருந்து வந்த கோரிக்கைகளை மட்டுமே நான் இங்கு பெண்கள் சார்பாக கூறினேன்
இங்கு முஸ்லிம் எம்.பி.க்கள் கூறிய கருத்துக்களை ஏற்றுக் கொள்கின்றேன்.முஸ்லிம் மதம் என்பது நாங்கள் நினைப்பதுபோன்று சிறிய மதம் அல்ல.ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வளர்ந்துவரும் மதம்.
அந்த மதத்தில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்துவதற்கு நாங்கள் யாரும் முயற்சிக்கவில்லை. எமது ரத்தம் அவர்கள். நான் சொன்ன விடயம் சிறுபிள்ளைகளையும் பெண்களையும் மட்டுமே கருதியது. மதத்தை நிந்திப்பதற்காக நான் கூறவில்லை என்றார்.