மச்சினிக்காக 20 மில்லியன் ரூபா இழந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் !
இணைக்கு போனாலும் பிணைக்கு போக கூடாது என கூறுவது இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா வாழ்வில் பலித்துள்ளது.
தனது மனைவியின் சகோதரிக்காகப் பிணை நின்ற இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா 20 மில்லியன் ரூபாயை இழந்துள்ளார்.
சர்ச்சைக்குரிய ஏர்பஸ் (Airbus) ஒப்பந்தம் தொடர்பான விசாரணையில் சந்தேகநபரான, விமான நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனாவின் மனைவி பிரியங்கா நியோமாலியின் பிணைத் தொகையை அரசுடமையாக்க ஃபோர்ட் நீதவான் பசனா அமரசேகர இன்று (30) உத்தரவிட்டார்.

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் (Airbus) ஒப்பந்தம்
முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கி நியோமாலி வீரநாயக்க ஆகியோர் நீதிமன்றத்தில் சந்தேகநபருக்கான பிணையாளர்களாக ஆஜராகியிருந்தனர்.
சந்தேகநபர் நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து தலைமறைவாகி வருவதால், அவர்களது பிணைத் தொகையை அரசுடமையாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த சந்தேகநபர் மீது ஏற்கனவே பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிணையாளர்களான அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். முன்னதாக, இவ்வழக்கு தொடர்பாக தலா 20 மில்லியன் ரூபா மதிப்பிலான இரண்டு தனிப்பட்ட பிணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அதன்படி, அந்த முழுத் தொகையும் அரசுடமையாக்கப்படும்; பிணையாளர்கள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர், அந்தத் தொகையில் 20 மில்லியன் ரூபாவை இன்றே நீதிமன்றத்தில் செலுத்துவதாகத் தெரிவித்தார்.