இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தம் ; ஜனாதிபதி அநுர வெளியிட்ட அறிக்கை
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த தீர்மானமானது இரு தரப்பிலும் அப்பாவி உயிர்களைக் காப்பாற்றுவதற்கான ஒரு முக்கியமான ஒப்பந்தம் மட்டுமல்ல, நிலையான அமைதி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை அடைவதற்கான முதல் மற்றும் முக்கிய படியாகும் என தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
ஒரு பாரிய பேரழிவு ஏற்படுவதற்கு முன்பாகவே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்கள் நெருக்கடியைத் தீர்க்க தோட்டாக்களுக்குப் பதிலாக வார்த்தைகளைப் பயன்படுத்த முடிவு செய்து தங்கள் மதிநுட்பத்தையும், இராஜதந்திரத் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடு என்ற ரீதியில் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு அமைதியான தீர்வு காண்பதற்கான ஒரு முக்கிய படியாக இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் இருக்கும் என்று இலங்கை நம்புவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய கலந்துரையாடலை ஆதரிப்பதாகவும், தற்போதைய காலத்தில் பிராந்திய அமைதியை அடைவதற்குத் தேவையான எந்தவொரு பங்களிப்பையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்தார்.