தமிழ் மக்களை ஏமாற்றும் அநுர அரசு ; சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு
தமிழர்கள் விடயத்தில் அநுர அரசும் முன்னைய ஆட்சியாளர்களைப் போலவே ஏமாற்று வித்தைகளைக் காட்டத் தொடங்கியுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதனால் அநுர அரசு மீதான நம்பிக்கை அல்லது எதிர்பார்ப்பு குறைவடைந்து வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"மக்களின் பல்வேறுபட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி அநுரகுமார ஜனாதிபதியாக வந்திருக்கின்ற நிலையில் உண்மையாகவே ஜனாதிபதி மீதான எதிர்பார்ப்பு எந்தளவில் உள்ளது என்பது தற்போது கேள்விக்குறியாக உள்ளது.
குறிப்பாக ஐனாதிபதி மீதான நம்பிக்கை அல்லது எதிர்பார்ப்பு என்பன குறைந்து வருகின்றது என்பதுதான் உண்மை.
இதனால் பெரும் நம்பிக்கையின் அடிப்படையில் மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்களுக்கு இப்போது ஏமாற்றமே கிடைக்கின்றது.
இவ்வாறான நிலைமையில் அரச கட்சியைப் பொறுத்தவரையில் தாங்கள்தான் தமிழ் மக்களுக்கு ஏதோ செய்வதாகக் காட்டுவதற்கு முயற்சிக்கின்றனர்.
அதனை எமது மக்கள் தெளிவாக முதலில் விளங்கிக்கொண்டு சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
குறிப்பாக அநுரவின் அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தமிழ் மக்களுக்காகப் பலதைச் செய்வதாகச் சொல்லி இருந்தது.
ஆனால், அவ்வாறு கூறிய எதனையும் அநுர தரப்பு இதுவரையில் செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளார்.