வாகன இறக்குமதிக்கான வரி அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி அநுரவின் விளக்கம்
நாட்டில் இன்னுமொரு பொருளாதார நெருக்கடி உருவாகுவதை தடுக்கும் நோக்கில், இறக்குமதியாகும் வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
குருணாகல் - கல்கமுவ பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே, நாட்டின் மொத்த டொலர் கையிருப்பு குறைவாக இருப்பதை கருத்தில் கொண்டு, வாகன வரியை உயர்த்தியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கடந்த 5 ஆண்டுகளாக தனிப்பட்ட பயனுக்கான வாகன இறக்குமதி தடைசெய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது கட்டுப்பாடுகளை மெல்லிய முறையில் தளர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஒரே நேரத்தில் அதிகளவில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவது பொருளாதாரத்தில் எதிர்பாராத சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால், வரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
மேலும், கடந்த காலத்தில் சட்டவிரோதமாக வாகனங்களை இறக்குமதி செய்து பயன்படுத்திய சிலரை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை எதிர்வரும் நாட்களில் கைது செய்யவுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.
உர மானியம் ரூ. 15,000 இருந்து ரூ. 25,000 ஆக உயர்த்தப்பட்டிருந்தாலும், அதை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் விவசாயிகளுக்கு சிக்கலை உருவாக்கியுள்ளதாக அவர் ஒப்புக் கொண்டார்.
கடந்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களை சரிசெய்வதற்காக அதிக நேரம் செலவிட வேண்டிய நிலையில், புதிய வேலைத்திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நடப்பு காலத்தில் வாகனங்களின் விலை அதிகரித்திருந்தாலும், எதிர்காலத்தில் அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி உறுதி அளித்தார்.
இவ்வாறு, பொருளாதாரத்திற்கேற்ற வகையில் கட்டுப்பாடுகளை மெல்லிய முறையில் தளர்த்தும் பணிகள் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.