தையிட்டியில் மற்றுமொரு சட்டவிரோத கட்டிடம்; ஆரம்பமாகும் எதிர்ப்பு
யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள மற்றுமொரு கட்டிடம் திறக்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தையிட்டியில் சட்டவிரோத விகாரை கட்டுமானம் அமைந்துள்ள பகுதியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள மற்றுமொரு கட்டிடம் திறக்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, குறித்த பகுதியில் காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட தரப்பினரால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தையிட்டி பகுதியில் பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டு, விகாரையொன்று கட்டப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டு வரும் நிலையில், அப்பகுதியில் மண்டபம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளதாகக் குறித்த போராட்டத்தில் பங்கேற்றுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் காணி உரிமையாளர்களுக்குக் கொழும்பில் வைத்து உறுதியளித்த சில நாட்களிலேயே இவ்வாறான செயற்பாடு இடம்பெறுவதைக் கண்டிப்பதாகவும் இந்த விடயத்தில் சர்வதேசம் தலையீடு செய்து உரிய தீர்வை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.