அடுத்த நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
எதிர்வரும் புதன்கிழமை (18-01-2023) நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு மீண்டும் கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டமூலத்தை விவாதத்துக்கு எடுப்பது தொடர்பான இறுதித்தீர்மானத்தை மேற்கொள்ளவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடாளுமன்றத்தை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை கூட்டுவதற்கு இன்று (13-01-2023) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசாநாயக்க தெரிவித்தார்.
இந்த தினங்களில் நாடாளுமன்றம் மு.ப. 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தவிர்ந்த ஏனைய தினங்களில் மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2307/12 மற்றும் 2308/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள், வெளிநாட்டு செலாவணி சட்டத்தின் கீழ் 2308/51 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அனுமதிக்கப்படவுள்ளதாக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.