வடமத்திய மாகாண மக்களுக்கு விசேட அறிவித்தல்
சீரற்ற வானிலை காரணமாக பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்று (19) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பொலன்னறுவை மாவட்டத்தில் பொலனறுவை - மட்டக்களப்பு வீதியில் மனம்பிட்டிய பிரதேசத்தில் இருந்து கல்லேல்ல வரையில் ஒருபகுதி வெள்ளத்தால் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதால், பயணிகளின் நலன் கருதி மனம்பிடியவிலிருந்து கதுருவெல வரை விசேட ரயில் சேவைகள் இயக்கப்பட்டுள்ளன.
பொலன்னறுவை - சோமாவதிய வீதியில் 35 மற்றும் 37ஆவது கிலோமீற்றர் இடையே, வௌ்ள நீர் வீதியில் பெருக்கெடுத்துள்ளதால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. மேலும் சோமாவதிய விகாரைக்கு வருகைதரும் சோமாவதிய - சேருவாவில வீதியின் சில இடங்களும் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் அவ்வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அருணபுர - அரலகங்வில வீதியில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
பள்ளியகொடெல்ல - சுங்காவில வீதியில் பம்புரான பாலத்திற்கு அருகில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் யாய 08 பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், மல்வத்து ஓயா பெருக்கெடுத்துள்ளதால், அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கோஹொம்பகஸ் சந்திக்கும் மல்வத்து ஓயா பாலத்திற்கும் இடையிலான பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது.
அவுகன - வலவ்வேகம ஊடான கலாவெவ வீதியின் அவுகன விஹாரைக்கு அருகில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் இப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், ஹந்துங்கம பாலத்திற்கு அருகில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், கல்னேவவிலிருந்து அலுபத்த வழியாக ஹிரிபிட்டியாகம வீதியின் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
தத்திரிமலை - செட்டிகுளம் வீதியில் போகொட பாலம் அருகே வெள்ளம் சூழ்ந்ததால் இப்பகுதியில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, மேற்குறிப்பிடப்பட்ட பகுதிகள் வழியாக பயணிக்கும் பொதுமக்களும், வாகன சாரதிகளும் தொடர்புடைய அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் பொதுமக்களுக்கு மாற்று வழிகள் குறித்து தெரிவிக்க அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளதால், அந்த இடங்களில் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.