பிரதான மருத்துவமனைகளுக்கு செல்லுமுன்னர் அறிவியுங்கள்; விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
கொரோனா நோயாளர்களை மருத்துவமனைகளில் அனுமதிக்கும் முன்னர் சம்பந்தப்பட்ட சுகாதார துறையினருடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்திலுள்ள பிரதான மருத்துவமனைகளுக்கு கொரோனா நோயாளர்களை அழைத்து வருவதற்கு முன்னர், பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் அல்லது சுகாதார மருத்துவ அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு சுவசெரிய மற்றும் பிற அம்புலன்ஸ் சேவைகளுக்கு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
குறுகிய நாட்களுக்குள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நோயாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பானது சிக்கல் நிலையை தோற்றுவித்துள்ளதாக சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகமான வைத்தியர். லால் பணப்பிடிய தெரிவித்துள்ளார்.
அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு சுவாசிப்பதற்கு பெரும்பாலும் ஒட்சிசன் தேவைப்படுகிறதாகவும் குறிப்பாக மேல் மாகாணத்தில் இந்நிலைமையை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேல் மாகாணத்திலுள்ள மருத்துவ நிபுணர்களுடன் இன்று முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலில், நோயாளர்களை அனுமதிப்பதற்கு முன்னர் பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் அல்லது சுகாதார மருத்துவ அலுவலகத்தை தொடர்பு கொள்ளமாறு அம்புலன்ஸ்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், ஆபத்தான நிலையிலுள்ள நோயாளிகள் தாமதமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.