ஜப்பானிய காதலியுடன் வந்தவர் விமான நிலையத்தில் சிக்கினார்!
இலங்கைக்கு விஜயம் செய்து விட்டு மீண்டும் நாடு திரும்புவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றிருந்த அமெரிக்கப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வெளிநாட்டு பிரஜையிடம் இருந்து 9 மில்லிமீற்றர் ரகத்தைச் சேர்ந்த 10 தோட்டாக்களை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைப்பற்றினர்.
38 வயதான அமெரிக்க பிரஜை கைது
Pritchett Jermaine Adriun என்ற 38 வயதான அமெரிக்க ஆட்டோ சாரதி ஒருவர் கடந்த ஜுலை மாதம் 12 ஆம் திகதி இலங்கைக்கு வந்திருந்தார்.
அவர் தனது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்புவதற்காக நேற்று (டிச 28) கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்த போது, விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவரது பயணப் பொதிகளை பரிசோதித்தபோது தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து விமான நிலைய பொலிஸாருக்கு அதிகாரிகள் அறிவித்ததையடுத்து பொலிஸார் அவரை கைது செய்தனர்.
அதேவேளை மாலம்பே பகுதியில் உள்ள தனது நண்பரின் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்த அமெரிக்கப் பிரஜை தனது ஜப்பானிய காதலியுடன் இலங்கை வந்திருந்தமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகின்றது.