பலாப்பழத்தால் இலங்கை படைக்கவுள்ள சாதனை!
இலங்கை மக்களின் உணவில் பலாப்பழத்திற்கென தனி இடமுண்டு. பழம் முதல் கொட்டைவரை அத்ற்கென தனி இடமுண்டு. பலாக்காய் கறி முதல், பலாக்கொட்டை பொரியல்வரை பல்வேறு வடிவங்களில் பலாப்பழம் எமது உணவுகளில் கலந்துள்ளது.
இலங்கையில் எப்பிரதேசத்திலும் பலாப்பழ மரங்களை வளர்க்க முடியும். கூழன், வரிக்கன் என இதில் பலவகை உண்டு.
இந்நிலையில் நாடு பூராகவும் மூன்று மில்லியன் பலா மரங்களை நடும் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அனுராதபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
அரசாங்கத்தின் உணவு பாதுகாப்பு திட்டம்
“ஹெரலி பெரலி” எனும் தொனிப்பொருளில் நேற்று (02) வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் அனுராதபுரம் விமானப்படை தளத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பலாப்பழ சந்தையை உருவாக்கி இலங்கை மக்கள் மத்தியில் பலாப்பழத்தை ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கத்தின் உணவு பாதுகாப்பு திட்டத்துடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி இந்த வருடத்திற்குள் எழுபத்தைந்தாயிரம் பலா மரங்கள் நடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் பலாப்பழத்தோட்டம் தொடர்பாக எழுதப்பட்ட “ஹெரலி பெரலி” என்ற புத்தகமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
இந்தப் புத்தகத்தில் பலாப்பழம் சாகுபடி மட்டுமின்றி, அது தொடர்பான பொருட்கள் பற்றிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.