வாக்களிப்பில் ஆர்வம் காட்டாத அம்பாறை மக்கள்!
அம்பாறை மாவட்டத்திலுள்ள 20 உள்ளூராட்சி சபைகளில் கல்முனை மாநகர சபை தவிர்ந்த ஏனைய சபைகளுக்கு இன்று தேர்தல் பொலிஸாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மந்தகதியில் நடைபெற்று வருகிறதாக கூறப்படுகின்றது.
மக்கள் வாக்களிக்க வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தருவதில் அசமந்த நிலையுள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.
112 வேட்பாளர்கள் போட்டி
அம்பாறை மாவட்டத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள காரைதீவு பிரதேச சபை எல்லைக்குள் காரைதீவு, மாளிகைக்காடு மற்றும் மாவடிப்பள்ளி என மூன்று ஊர்கள் உள்ளன.
தமிழர்களும் முஸ்லிம்களும் செறிந்து அந்நியோன்யமாக வாழ்ந்து வரும் . இந்த காரைதீவு பிரதேச சபை ஏழு வட்டாரங்களைக்கொண்டது.
இதில் நான்கு வட்டாரங்கள் காரைதீவு தமிழ் பிரதேசத்திலும் மிகுதி மூன்று வட்டாரங்கள் மாளிகைக்காடு (2) மாவடிப்பள்ளி (1) ஆகிய முஸ்லிம் பகுதிகளிலும் உள்ளன.
காரைதீவு பிரதேசத்தில் மொத்த சனத்தொகை 21,694. அவர்களில் மொத்தமாக 14,624 வாக்காளர்கள் உள்ளனர். அவற்றில் 8,659 தமிழ் வாக்காளர்களும் 5,965 முஸ்லிம் வாக்காளர்களும் உள்ளனர்.
இப்பிரதேச சபையைக் கைப்பற்றும் கட்சி குறைந்தது 6 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டால் தான் தனித்து ஆட்சியமைக்க முடியும். இன்றேல் கூட்டாட்சி தான் சாத்தியம்.
இம்முறை ஏழு கட்சிகள் ஒரு சுயேட்சை உள்ளிட்ட எட்டு அணிகள் போட்டியிடுகின்றன. இந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் காரைதீவு பிரதேச சபைக்கு 11 உறுப்பினர்களைத்தெரிவு செய்வதற்காக 112 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
இலங்கை தமிழரசுக்கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய சமாதானக்கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆகிய 07 கட்சிகளும் முன்னாள் உப தவிசாளர் ஏ.எம்.ஜாஹீர் தலைமையிலான 01 சுயேட்சைக்குழுவும் (தையல் இயந்திரம்) போட்டியிடுகின்றன.
அதேவேளை கடந்த மூன்று தடவைகள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.