படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரம் குறித்து சர்வதேச மன்னிப்புசபை கவலை
இலங்கையில் அறிவிக்கப்பட்டுள்ள அவசரகாலநிலையில் படையினர் பலப்பிரயோகத்தில் ஈடுபடுவதற்கான முழுமையான அதிகாரத்தை இலங்கை அரசாங்கம் வழங்ககூடாது என சர்வதேச மன்னிப்புசபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அத்துடன் மக்களின் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிற்குகு படையினரை பயன்படுத்தவேண்டாம் எனவும் சர்வதேச மன்னிப்புசபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆயுதப்படையினரை பயன்படுத்துவது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வது ஒருவரின் உயிரிழப்பிற்கு காரணமான அளவுக்கதிகமான கண்ணீர்புகை பிரயோகம் போன்றவற்றின் மூலம் அதிகாரிகள் தங்கள் பதில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளமை கவலையளிப்பதாகவும் சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர் யாமினி மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
அவசரகாலநிலையின் போதுகூட பலத்தை பயன்படுத்துவதற்கான முழுமையான அதிகாரத்தை வழங்குவது ஆபத்தானது என சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை , இராணுவத்தினர் எதிரிகளுடன் போரிடுவதற்கே பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர் பொதுமக்களை கட்டுப்படுத்துவதற்கு இல்லை எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
காயங்கள் உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அதிகாரிகள் பொறுமையுடனும் நிதானத்துடனும் செயற்படவேண்டும்,மிகவும் அவசியமாக பலத்தை பயன்படுத்தவேண்டிய சூழ்நிலைகளில் நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக ஆகக்குறைந்தளவு பலத்தை அளவுக்கதிகமாகாமல் பயன்படுத்தவேண்டும், எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை கோரியுள்ளது.
ஆர்ப்பாட்டங்கள் வன்முறைகளாக மாறினால் சட்டம் ஒழுங்கு அதிகாரிகள் தனித்தனி சம்பவங்களாக ஆராய்ந்து மிகவும் அவசியமான சூழ்நிலைகளிற்கும் வன்முறையை கட்டுப்படுத்துவதற்கும் பலத்தை பயன்படுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பலத்தை பயன்படுத்துவது சட்டஅமுலாக்க பிரிவினர் எதிர்கொள்ளும் சூழ்நிலைக்கு சமமானதாகயிருக்கவேண்டும், அதிகாரிகள் வன்முறைகளை தடுக்க முயலவேண்டும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடாது எனவும் மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
நாடு மிக மோசமான பொருளாதார நிலையை எதிர்கொண்டுள்ள ஆர்ப்பாட்டங்கள் மேலும் தீவிரமடையும் நிலையில் அதிகாரிகள் நிலைமையை கட்டுப்படுத்த தணிப்பதற்கு தீவிரநடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மற்றும் தராதரங்களின் அடிப்படையில் பொருட்கள் சேவைகளை பெற்றுக்கொள்வதை உறுதி செய்யவேண்டும் என யாமினி மிஸ்ரா தெரிவித்துள்ளார்.