கனடா எல்லையில் உயிரிழந்த இந்திய குடும்பம் தொடர்பில் வெளியான புதிய தகவல்!
கனடா எல்லை அருகே குழந்தை உட்பட நான்கு பேர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட விடயம் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அண்மை காலமாக கனடா மற்றும் அமெரிக்க எல்லை மாகாணங்கள் கடும் பனிப்புயலால் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கனடாவின் Emerson எல்லைப்பகுதியில் உயிரிழந்த நிலையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு குழந்தை உட்பட நான்கு பேரின் உடல்களை மானிட்டோபா காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

மேலும் இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டவர்கள் இந்தியர்கள் எனவும், உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் பெரியவர்கள், ஒருவர் நடுத்தர வயது உடையவர், அமெரிக்காவில் மனித கடத்தலில் ஈடுபட்டதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இறந்தவர்கள் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதேவேளை உயிரிழந்தவர்கள், இந்தியாவில் குஜராத் மாநிலத்தின் Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் (Jagdish 35), அவரது மனைவி வைஷாலி (Vaishali 33) பிள்ளைகள் விஹாங்கி (Vihanngi 12) மற்றும் தார்மிக் (Dharmik 3) ஆகியோர் என தெரியவந்துள்ளது.

மேலும், ஜகதீஷ் என்பவர் பாடசாலை ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர் எனவும், சுமார் 65 இலட்ச ரூபாய் கொடுத்து அமெரிக்கா செல்ல முடிவு செய்து புறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில், கனடாவில் பனியில் உறைந்து உயிரிழந்த குடும்பத்தாரின் சடலங்கள் தகனம் செய்வது தொடர்பிலான முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது உயிரிழந்த நான்கு பேரின் உடல்களும் வின்னிபெக்கில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அவர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டாம் என குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து வின்னிபெக்கிலேயே அவர்களின் சடலங்கள் தகனம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அதே சமயம் இவ் விடயத்தில் எந்தவொரு இறுதியான முடிவு எடுக்கப்படவில்லை. இந்நிலையில், வின்னிபெக்கில் ஜகதீஷ் உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் இது தொடர்பான இறுதி முடிவை இந்திய உயர் ஸ்தானிகராலயம் எடுக்கும் என தெரியவந்துள்ளது.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்காக $70,000 நிதி திரட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.