பார்த்தவுடன் பிடித்துப்போகிற செவ்வாழைப் பழத்தில் ஒளிந்துள்ள அற்புத நன்மைகள்!
பழங்களில் பலவகை இருந்தாலும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் பார்த்தவுடன் பிடித்துப்போகிற பழங்களில் ,ஒன்று செவ்வாழைப்பழம்.
இதன் மருத்துவ பலன்கள் எண்ணில் அடங்காதவை.
அதிக சத்துள்ள பழம்
வாழைப்பழங்களில் அதிகளவு சத்துள்ளது செவ்வாழைதான். பொட்டாசியம், மக்னீஷியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, தையமின், ஃபோலிக் ஆசிட், பீட்டா கரோட்டின் என மனித உடலுக்கு தினசரி தேவைப்படும் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் நிறைந்த பழம் இது.
காயகல்பம்
மூளையின் செயல்பாடு, இதயத்தின் செயல்பாடு, ரத்த ஓட்டம், ரத்த உற்பத்தி, சிறுநீரகத்தின் இயக்கம், கல்லீரலின் இயக்கம், குடலின் இயக்கம் ஆகியவற்றுக்குத் தேவையான சத்துகள் நிறைந்தது செவ்வாழை.
தவிர, ஒவ்வொரு தாவரத்துக்கும் தனித்துவமான தாவர வேதிப்பொருள்கள் இருக்கும். அந்த அடிப்படையில் உடம்பை வலுவாக்கும் காயகல்பமாக மருத்துவத்தில் செவ்வாழைப் பழமும் பயன்படுத்தப்படுகிறது.
நீரிழிவு நோயாளிகள்
நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடக் கூடாது என்று சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், மருத்துவரின் ஆலோசனையின்படி செவ்வாழையை அளவாகச் சாப்பிடலாம்.
ஏனென்றால், இதிலிருக்கிற ஊட்டச்சத்துகள் சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கிற தன்மையைக் கொண்டுள்ளன.இது ஆய்வு மூலமாகவும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
செவ்வாழை சாப்பிடுவதற்கு உகந்த நேரம்
செவ்வாழைப்பழம் சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை 6 மணி. இந்த நேரத்தில் முடியவில்லையென்றால் பகல் 11 மணி பிரேக் நேரத்திலோ, மாலை 4 மணி பிரேக் நேரத்திலோ சாப்பிடலாம்.
உணவு எடுத்தவுடன் செவ்வாழையைச் சாப்பிட்டால் மந்தமாக உணர்வதுடன், இதனுடைய முழு சத்துகளும் நமக்குக் கிடைக்காது. இது எல்லா பழங்களுக்கும் பொருந்தும்.
செவ்வாழையில் இருக்கிற பொட்டாஷியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும்.
கண் பிரச்னைகளைத் தடுக்கும்
வேலை, படிப்பு எனப் பெரியவர்களில் ஆரம்பித்து குழந்தைகள்வரை இன்றைக்கு கம்ப்யூட்டரையும் செல்போனையும் சார்ந்தே வாழ வேண்டியிருக்கிறது.
செவ்வாழையில் நியூட்டின் (Nutein), ஸியான்தினின் (zeaxanthin), பீட்டா கரோட்டின், வைட்டமின் `ஏ’ ஆகிய சத்துக்கள் அதிகம்.
இவை கண்களின் செல்களில் ஏற்படக்கூடிய பிரச்னைகளைச் சரி செய்யக்கூடியவை.
நாளின் முதல் உணவு
காலையில் முதல் உணவாக ஒரு செவ்வாழைப்பழத்தை உமிழ்நீருடன் கூழாக மென்று சாப்பிட்டால் ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகளில் 60 சதவிகிதம் கிடைத்துவிடும்.
அதன்பிறகு நாம் சாப்பிடுகிற உணவு, சத்தில் குறை இருந்தாலும் உடல் சமாளித்துவிடும். காலையில், முதல் உணவாக செவ்வாழையைச் சாப்பிட்டால் அதிலிருக்கிற மொத்த சத்தையும் உடல் கிரகித்துக்கொள்ளும்.
எலும்பு மஜ்ஜை
செவ்வாழைப்பழத்தில் இருக்கிற சத்துகள் எலும்பு மஜ்ஜையை பலப்படுத்தி, புதிய ரத்த அணுக்களை உருவாக்கும் தன்மை வாய்ந்தவை என்பதால், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும்.
நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும்
நரம்பு மண்டலம் பலவீனமாக இருப்பவர்கள், தினமும் காலை 6 மணிக்கு ஒரு செவ்வாழைப்பழம் என 48 நாள்கள் சாப்பிட வேண்டும். இப்படிச் சாப்பிட கைகால் நடுக்கம், கைகால் மரத்துப்போதல் போன்ற நரம்பு சம்பந்தப்பட்ட பலவீனங்கள் சரியாகும்.
அதுமட்டுமல்லாது கறுப்பான தலைமுடி, சுருக்கமில்லாத சருமம், தெளிவான கண் பார்வை என செவ்வாழைப்பழம் சாப்பிடுபவர்களை இளமையாக வைக்கும்.