வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த தாய்: கணவன் - பிள்ளைகளிடம் தீவிர விசாரணை
மொரகல்ல - கலவிலவத்த பகுதியில் வெட்டுக்காயங்களுடன் 3 பிள்ளைகளின் தாய் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்றிரவு (17-02-2024) 08.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் மொரகல்ல - கலவிலவத்த பகுதியைச் சேர்ந்த 47 வயதான எஸ்.ஷிராணி லக்ஷிகா குமாரி என்ற பெண்ணே உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் வீட்டில் முகத்தில் வெட்டுக்காயங்களுடன் கிடந்ததாகவும், அவர் பேருவளை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, பொலிஸாரின் விசாரணைகளின் போது, வீட்டின் படுக்கையறை, நடைபாதை மற்றும் வீட்டின் முன் கதவுகளுக்கு அருகில் இரத்தக் கறைகள் காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின்போது உயிரிழந்த பெண்ணின் கணவர், மகன் மற்றும் மகள் ஆகியோர் வீட்டில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், வீட்டின் முன் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் படுகாயமடைந்த தமது தாயை வைத்தியசாலையில் அனுமதித்ததாக அவர்கள், பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
தற்போது கொலை செய்யப்பட்டுள்ள பெண்ணின் கணவர் மற்றும் 2 பிள்ளைகளிடமும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மர்ம கொலையை வீட்டில் உள்ளவர் செய்தார்களா? அல்லது வெளியில் இருந்து வந்தவர்கள் செய்வார்களா? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.