அரச அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்
கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடனத்தை சமர்ப்பிக்க வேண்டிய அனைத்து அரச அதிகாரிகளுக்கும் , விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி, 2026ஆம் ஆண்டுக்கான சொத்து விபரங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி ஜூன் மாதம் 30ஆம் திகதி என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

வெளிப்படைத்தன்மை மற்றும் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில், இம்முறை அனைத்துப் பிரகடனங்களும் டிஜிட்டல் முறைமை ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கையால் பூர்த்தி செய்யப்பட்ட பிரகடனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. அரச அதிகாரிகள் கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.ciaboc.gov.lk ஊடாக தமது மின்னணு பிரகடனங்களைச் சமர்ப்பிக்க முடியும்.
அதேவேளை ஜூன் மாத இறுதி நாட்களில் ஒரே நேரத்தில் அதிகமானோர் இணையத்தளத்தைப் பயன்படுத்துவதால் தொழில்நுட்பத் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அத்துடன், நிர்ணயிக்கப்பட்ட திகதிக்குள் சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்கத் தவறுவது பாரிய குற்றமாகக் கருதப்படும் எனவும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக, ஜூன் 30ஆம் திகதிக்குப் பின்னர் பிரகடனங்களைச் சமர்ப்பிப்பவர்கள் மேலதிக கட்டணத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் மற்றும் அவர்களுக்கு எதிராக ஏனைய சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் ஆணைக்குழு தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
எனவே, பொறுப்புள்ள அதிகாரிகளாக தமது மின்னணு சொத்து பிரகடனத்தை பூர்த்தி செய்யுமாறு கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலும் அறிவுறுத்தியுள்ளது