இன்று முதல் அனைத்து பாடசாலைகளும் ஆரம்பம்
நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகளின் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகள், இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும், பாடசாலைகளின் சிற்றுண்டிச்சாலைகளை திறக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் மாணவர்கள் தமக்குத் தேவையான உணவுகளை கொண்டுவர வேண்டும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.
சுகாதார விதிமுறைகளுக்கு அமைவான பாடசாலைகளை திறக்க அனுமதிகள் கிடைக்கப்பெற்றவுடன் சிற்றுண்டிச்சாலைகளைத் திறப்பதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று முதல் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் முதலாம் தரம் முதல் 13 ஆம் தரம் வரையான கல்வி நடவடிக்கைகளை சாதாரண நடைமுறைகளுக்கமைய முன்னெடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவரத்னவினால் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள், சில கட்டுப்பாடுகளுடன் மீள திறக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் பாடசாலையின் ஒவ்வொரு வகுப்பறைகளிலும் உள்ள மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததுடன், ஒரு வகுப்பறையில் இருக்கக்கூடிய மாணவர்களின் அளவும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இதன் காரணமாக , பெருமளவான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பல பாடசாலைகள் குழு முறைமைக்கமையவே கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.
எனினும், புதிய நடைமுறைக்கமைய விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.