அக்குரேகொட இரட்டை கொலை ஆதாரங்கள் அழிப்பு
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணியும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர்கள் தமது கைபேசிகளிலுள்ள தரவுகளை அழித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அக்குரேகொடவில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் இன்று (18) கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளனர்.

12 பொலிஸ் குழுக்கள் விசாரணை
பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 12 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன.
முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், கொலையாளிகள் பயன்படுத்திய துப்பாக்கிகளைக் கடத்திச் சென்ற இரண்டு சகோதரர்கள் கடந்த 16ஆம் திகதி பிற்பகல் கொட்டாவை பகுதியில் வைத்து மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று (17) கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை இன்று வரையில் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நேற்று (17) பிற்பகல் பொல்கஸ்ஓவிட்ட பகுதியில் வைத்து ‘பொல்கஸ்ஓவிட்ட டிலா’ என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இரு இளைஞர்களும் துப்பாக்கிகளைக் விநியோகித்துள்ளமைவிசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தலங்கம, அக்குரேகொட பகுதியில் வைத்து இந்தச் சட்டத்தரணியும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.