காற்று மாசுபாடு; யாழ். மாநகர சபைக்கு நீதிமன்றம் விசேட உத்தரவு!
யாழ்ப்பாணப் பகுதியில் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு யாழ் மாநகர சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த உத்தரவுகளை பிறப்பிக்கக் கோரி யாழ்ப்பாண வைத்தியர் உமா சுகி நடராஜா தாக்கல் செய்த ரிட் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குப்பைகளை எரிப்பதால் கடுமையான காற்று மாசுபாடு
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ரோஹண அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் முன்னிலையான சத்தரணி ரவீந்திரநாத் தாபரே, குப்பைகளை எரிப்பதால் யாழ்ப்பாணப் பகுதியில் கடுமையான காற்று மாசுபாடு ஏற்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் காற்று மாசுபாட்டின் தன்மையை எடுத்துரைக்கும் அறிக்கைகளையும் சட்டத்தரணி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இந்த மாசுபாடு பல்வேறு சுகாதார நிலைமைகள் மோசமடைவதற்கு பங்களித்துள்ளதாகவும் கூறினார். முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிபதிகள், யாழ்ப்பாணப் பகுதியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு யாழ் மாநகர சபை மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபைக்கு உத்தரவிட்டனர்.