இலங்கையில் 48 ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற மிக மோசமான சம்பவம்!
இலங்கையின் விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் இடம்பெற்று இன்றுடன் (04-12-2022) 48 வருடங்கள் நிறைவடைகின்றன.
இச்சம்பவம் மஸ்கெலியா பிரதேசத்தில் அமைந்துள்ள சப்த கன்யா சிகரத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த அரை நூற்றாண்டில் இலங்கையில் இடம்பெற்ற மிக மோசமான அனர்த்தமாக இது கருதப்படுகிறது.
கடந்த 1974 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் திகதி மலேசியாவில் இருந்து மக்கா நோக்கி புனிதயாத்திரை சென்ற யாத்திரிகர்களுடன் குறித்த விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின்போது 191 பேரும் உயிரிழந்தனர். உலகையே உலுக்கிய இந்த அனர்த்தம் இலங்கையில் இடம்பெற்ற பாரிய அசம்பாவிதமாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.
அந்த காலத்தில் இந்த சம்பவம் உலகின் இரண்டாவது மோசமான விமான விபத்தாக கருதப்பட்டது.
விமான நிலையத்திற்கான தூரத்தை விமானிகள் தவறாகக் கணித்து, குறைந்தபட்ச பாதுகாப்பான உயரத்தை விட கீழே இறக்கிய போதே தரையுடன் மோதி விபத்துக்குள்ளானதாக விமான ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தோனேஷியர்களாவர்.
இதனை நினைவு கூரும் முகமாக விபத்து நடந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் நோட்டன் பிரிஜ் பகுதியில் ஒரு நினைவுச்சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது.