திருகோணமலையில் கடற்கரையாக மாறிய விவசாய நிலங்கள்!
டித்வா புயலால் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் திருகோணமலை நீலாபொல பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் வெள்ளத்தையடுத்து கடற்கரையாக காட்சியளிப்பதாக விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.
நீலாப்பொல பகுதியில் மகாவலி ஆற்றின் அணைக்கட்டு உடைத்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக அதனை அண்டிய பகுதியில் உள்ள 80 ஏக்கருக்கு மேற்பட்ட வயல்நிலங்கள் மணலால் நிரம்பியுள்ளது.

வயல் நிலங்களுக்குள் 3 அடிக்கு மேல் மணல்
வயல் நிலங்களுக்குள் கிட்டத்தட்ட 3 அடிக்கு மேல் மணல் இருப்பதாகவும் இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் மணலை அகற்றுவதற்கு பாரிய செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே விவசாய நிலங்களில் உள்ள மணலை அகழ்வதற்கு விசேட ஏற்பாடுகள் செய்தோ அல்லது விசேட கொடுப்பனவுகள் வழங்கியோ விவசாயம் செய்யக்கூடிய நிலையை கமநல சேவைகள் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் உருவாக்கித்தர வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது தொடர்பாக திருகோணமலை மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் விஷ்ணுதாசன் ,
வயல் காணியில் இருந்து மண்ணை அகழ்வதற்கு புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் அனுமதியுடன் காணி உரிமையாளருக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் அகழும் செலவை மண்ணை விற்பனை செய்வதன் மூலம் ஈடு செய்து கொள்ள முடியும் .

தற்போது வீதிகள் சேதமடைந்திருப்பதால் கொஞ்சம் தாமதித்து அடுத்த போகத்திற்கு முதல் இந்த நடவடிக்கையை இலகுவாக மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.