மீண்டும் ஒரு அரிய சந்தர்ப்பம்!
அரசு தரப்பு அதாவது ஜனாதிபதி ரணில் சம்பந்தப்பட்ட தரப்பு 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என ஆரம்பித்த பேச்சு வார்த்தை தேர்தல் காலத்தில் ஒரு நல்ல திருப்புமுன்னையை கொண்டு வந்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எவருக்கும் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்க கூடிய நிலை தெரியவில்லை. எனவே தமிழர்களது வாக்கினால்தான் போட்டியாளர்களது வெற்றி நிர்ணயிக்கப்பட போகிறது.
13யை அமுல்படுத்த வேண்டிய தேவை
வடக்கு தமிழர்களது வாக்குகள் தேவையானால், தமிழர்கள் அமுல்படுத்துமாறு அண்மைக் காலங்களில் கேட்டு வந்த , 13யை அமுல்படுத்த வேண்டிய தேவை சிங்கள அரசியல்வாதிகளுக்கு உள்ளது.
அதை வைத்தே தமிழர்களது ஆதரவை பெற முடியும் என்ற நிலை வந்துள்ளது. இது ராஜீவ் 13யை வாங்கிக் கொடுத்த நேரத்தை விட வித்தியாசமான காலமாக உள்ளது.
ராஜிவ் - ஜே ஆர் காலத்து ஒப்பந்தம் போடப்பட்ட போது அநேக இனவாத சிங்கள தரப்புகள் அதை எதிர்த்தன. ஜேவிபி அதை கடுமையாக எதிர்த்தது. இன்று அவர்களும் மாறிவிட்டார்கள். அவர்களே மாகாண சபைகளில் உறுப்பினர்களாக ஆகி இருந்தார்கள்.
இப்போது வடக்குக்கு வந்து 13 என்பது தமிழருக்கான நிரந்தர தீர்வு அல்ல , ஆனால் 13 இன்றைய நிலையில் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை வெளியிட்டு இருக்கின்றனர்.
அது ஒரு பெரியதொரு மாற்றம் ஆகும். ஜேவிபியினரது கருத்துகள் , உண்மையில் பாமர சிங்கள மக்களுக்கு வெகு வேகமாக கடத்தப்படக்கூடிய ஒரு பலமான குரலாகும். அத்தோடு அவர்களது கருத்துக்களை பாமர மக்கள் இலகுவாக புரிந்து கொள்வது உண்டு.
அவர்களது கடந்த கால அரசியல் வரலாறு எப்படியாக இருந்தாலும் , NPPஉடைய மாற்றம் வேறு விதமாகவே உள்ளது. அது இளம் தலைமுறையினரது சிந்தனை மாற்றமாக தெரிகிறது.
அவர்களும் போராளி குழுக்களாக இரு முறை தென்னிலங்கையில் போராடி , அனேக இழப்புகளை சந்தித்தவர்கள் என்பது பொதுவான ஒரு விடயம். இன்று அவர்கள் ஆயுத கலாச்சாரத்தை முற்றாக கைவிட்டு , அரசியல் பிரவாகத்தில் சிறப்பாக இயங்கி வருகிறார்கள். அவர்களது கொள்கைகளை எதிர்ப்பவர்கள் கூட அவர்களது சில விடயங்களை ஆதரிக்கிறார்கள்.
இந்திய கடும் எதிர்ப்புவாதிகளான JVPயினர் இந்திய ஆதரவு இன்றி இலங்கையை நடத்த முடியாது என இன்று பேச ஆரம்பித்துள்ளனர். அவர்களைப் போல் அரசியல் பரப்புரையை இலங்கையில் செய்யக்கூடிய பலம் எந்த ஒரு கட்சிக்கும் அல்லது எந்த ஒரு அமைப்புக்கும் இல்லை. அவர்களே 13-வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என சொல்வது ஒரு பெரிய வாய்ப்பு என்றால் மிகையாகாது.
இந்த தருணம் மீண்டும் வருமா என தெரியாது? உண்மையில் இந்த அலையை ஆரம்பித்து வைத்தவர் ரணில்தான். அதை கரு ஜெயசூரிய வழியாக அனைத்துக் கட்சிகளும் இணைந்து இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் அனைத்து கட்சிகளும் 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றக்கூடிய சம்மதத்துக்கு வந்துள்ளன. தேர்தல் முடிவுகளின் பின் இது நடக்குமோ தெரியாது.
அதற்கு முன் அதை சாத்தியமாக்கலாம். அது தமிழர்களது கைகளிலேயே உள்ளது. இங்கு இன்னொரு விடயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது ஜனாதிபதியின் காலம் சில வேளைகளில் ஆறு வருடங்களாக ஆகக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே தெரிகிறது. மைத்திரியின் காலத்தில் ஆறு வருடங்களில் இருந்து ஐந்து வருடங்களாக ஜனாதிபதியின் காலம் குறைக்கப்பட்டது.
அதற்காக சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படவில்லை. அதேபோல ரிவர்ஸில் ஐந்து வருடங்களாக இருப்பதை ஆறு வருடங்களாக நீடிப்பதற்கு சர்வஜக வாக்கெடுப்பு ஒன்று தேவைப்படாமல் போகலாம். ஆறுக்கு மேல் அதிகரிப்பதாக இருந்தால் மட்டுமே சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று தேவைப்படும். எனவே இந்த ஓட்டையை வைத்து இன்னொரு வருடம் ஜனாதிபதியாக ரணில் தொடர வாய்ப்பு உள்ளது.
அது ரணிலுக்கு சாதகமானது. சர்வஜக வாக்கெடுப்புக்கு போனால் அது ரணிலுக்கு தோல்வியாக முடியலாம். எனவே தேர்தலுக்கு முன் பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்து 13யை அமுலாக்கக் கூடிய ஒரு தருணமாக இது தெரிகிறது. இந்நேரத்தில் எந்த ஒரு கட்சியும் 13 வது திருத்தச் சட்டத்தை எதிர்த்து வாக்களிக்கப் போவதில்லை. தனிப்பட்ட ஒரு சிலர் அதை எதிர்க்கலாம்.
அது பெரிய பிரச்சினையாக வரப்போவதில்லை. இதை சாதகமாக்குவது தமிழர் கைகளில் உள்ளது. சிங்களவர்களை விட தமிழர்களே 13யை எதிர்ப்பதை அதிகமாக காணக்கூடியதாக உள்ளது. அதிலும் புலம்பெயர்ந்தவர்கள் இந்த 13யை எதிர்ப்பது தெரிகிறது.
அதற்கு காரணம் அவர்களுக்கு தேவை எப்போதும் நாட்டில் தொடர்ந்தும் பிரச்சனை இருக்க வேண்டும் என்பது மட்டுமே அல்லது தனிநாடு என்பதே. இவர்கள் எவருமே இலங்கையில் வாழ்பவர்கள் அல்ல. ஆக குறைந்தது அவர்கள் வாழும் நாடுகளில் உள்ள சட்டங்களை அல்லது அரசியலைக் கூட சற்றும் தெரியாதவர்கள் போலவே அவர்களது பேச்சுக்கள் மூலம் எமக்கு புலப்படுகிறது.
இந்த புலம்பெயர்ந்தவர்களது தவறான ஆலோசனைகளால் தான் முள்ளிவாய்க்கால் முடிவு ஏற்பட்டது என்பது எவராலும் மறுக்க முடியாது. இவர்கள் சொன்ன அமெரிக்க கப்பல் வருகிறது கதை முதல் அனைத்துமே அம்புலி மாமா கதைகளே. அவர்களுக்கு யதார்த்தம் தெரியாது. அனேகர் போராட்ட வாழ்வியலில் இருந்தவர்களே அல்ல.
போராட்டத்தை வைத்து அவர்கள் வாழ்க்கையை வாழ ஆரம்பித்தவர்கள். இது அவர்களது பொழுது போக்கு அல்லது அவர்களது தொழில். அந்த தொழிலை இழக்க புலம்பெயர்ந்தவர்களால் முடியாது. யதார்த்தம் தெரிந்தாலும் அதை வெளிப்படையாக சொல்ல அவர்கள் விரும்புவதே இல்லை. இதனால் அவர்களது வாழ்க்கையில் கோடீஸ்வரராக வாழ முடிகிறது.
ஆனால் இலங்கையில் வாழும் தமிழர்கள் கோவணம் கூட இல்லாமல் வாழும் நிலை தான் ஏற்பட்டுள்ளது. புலம்பெயர்ந்தவர்களது உதவிக்காக ஒரு சில தமிழ் அரசியல்வாதிகளும் தங்களது நிலைப்பாட்டை சரியாக தீர்மானிப்பதில்லை. அவர்கள் எப்போதுமே புலம்பெயர்ந்தவர்களது உதவி தேவை என இவர்களுக்கு ஏற்றபடி தங்களது அரசியலை செய்கிறார்கள்.
இலங்கையின் யதார்த்தத்தை சொல்ல வேண்டிய பொறுப்பு தாயகத்தில் வாழும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு உண்டு. ஆனால் அவர்களும் இனவாத பேச்சுக்களியே எழுபதுகளில் பேசியது போலவே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை தவிர்த்தால் அனைவருமே துரோகிகள் ஆகி விடுவார்கள் என அச்சப்படுகிறார்கள்.
இதுதான் பெரும் பிரச்சனையாக புரையோடிப் போய்க்கொண்டிருக்கிறது. இதில் இன்னொரு பிரச்சனை தமிழருக்கு சிங்களமும், சிங்களவருக்கு தமிழும் அடிப்படையில் தெரியாததே ஆகும். இக்காலத்தில் ரணில் , சஜித், அனுர ஆகியோர் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிட உள்ளார்கள். இவர்கள் அனைவரும் ஒருமித்து 13 குறித்து பேசுகிறார்கள்.
இதை வடக்குக்கு வந்து அவர்கள் தெளிவு படுத்துகிறார்கள். ரணிலின் நோக்கம் 13 மெதுவாக அமுல்படுத்துவது என்பதாக இருக்கிறது. அதைப் பிடித்து , சஜித் கூட 13 முழுமையாக அமுல்படுத்துவேன் என சொல்கிறார் .அணுர கூட 13 இனப்பிரச்சனைக்கான முழுத் தீர்வு அல்ல ஆனால் இந்த நிலையில் 13யை அமுல்படுத்த வேண்டும் என சொல்கிறார்.
அனுரவின் கருத்துப்படி இன ரீதியாக மக்கள் பிரிக்கப்படக்கூடாது அனைவரும் இலங்கையர் எனும் நிலையில் சம உரிமையோடு அனைத்து மக்களும் ஒரே தேசத்து மக்கள் என அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்பதை அழுத்தமாக சொல்கிறார். இதுதான் அவர்கள் சொல்லும் மாற்றம். 13 அவர்களது இறுதி முடிவல்ல.
அனைவரும் ஒரே நாட்டின் மக்கள் என்பதே அவர்களது அரசியல் சிந்தனையாக உள்ளது. இது மிக சிறப்பான ஒரு விடயமாகும். இதுவே பிரச்சனைக்கு முதல் வினையானது. இந்த பிரிவினை ஒரு நாட்டின் மக்களை பல இனங்களாக கூறு போட்டதாலே முரண்பாடுகள் ஏற்பட்டன. அதை இல்லாமல் ஆக்கியே ஆக வேண்டும்.
இதிலிருந்து ஒன்று நமக்குத் தெரிகிறது அனைவரையும் வைத்து 13யை அமுல்படுத்த வைப்பது இலகுவாக இருக்கிறது. இது போன்ற ஒரு, ஒருமித்த கருத்து இதுவரைக்கும் சிங்கள அரசியல்வாதிகளிடமிருந்து வந்ததே இல்லை. யாரோ எவரோ இழுத்துக் கொண்டே இருந்தார்கள். ஆனால் இன்று அந்த நிலை மாறி இருக்கிறது. தமிழர்கள் எப்போதுமே சர்வதேசம் எமது பிரச்சினையை தீர்த்து வைக்கும் என கனவு காண்கிறார்கள்.
இது ஒரு மாபெரும் தவறு. சர்வதேசம் என்ன சொன்னாலும் பகிரப்போறவன் அகப்பை உள்ளவன் தான். யார் எதைச் சொன்னாலும் முடிவு இலங்கை அரசின் கைகளிலேயே உள்ளது.
இன்று தமிழருக்கு இருக்கும் ஒரு பெரிய வாய்ப்பு தேர்தலுக்கு முன் பாராளுமன்றத்தில் அனைத்து கட்சிகளையும் 13யை அமுல்படுத்த தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து அதை முழுமையாக அல்லது 99 வீதமாகவாவது அமுல்படுத்த வைப்பதேயாகும். இதை கரூ ஜயசூரிய தனது கருத்தாக முன் வைத்துள்ளார். அவர் முன் வைத்துள்ள கருத்து உண்மையில் ரணிலின் கருத்து என்பது அனைவருக்கும் தெரியும். ரணிலின் கருத்துக்களை மிக அருமையாக நெறிப்படுத்தும் ஒரு நபராக கரூ இருந்து வந்துள்ளார்.
கரூவுக்கு இருக்கும் பௌத்த பீட மரியாதையின் நிமித்தம் அவரது பேச்சுக்களை பௌத்தர்கள் செவிமடுப்பார்கள். ரணிலுக்கு பௌத்தர்களின் மரியாதை மிக குறைவு. இதனால் தான் கருவை கருவியாக அவர் பாவிக்கிறார். எனவே அனைத்து சிங்கள கட்சிகளும் ஒரே குரலில் 13யை அமுல்படுத்தியே ஆக வேண்டும் எனும் போது , தமிழர்கள் இந்த வாய்ப்பை தவற விடக்கூடாது.
இதைத் தவிற விட்டால் இது போன்றதொரு வாய்ப்பு இனியும் கிடைக்குமா என்பது தெரியாது. கிடைக்கலாம் ஆனால் இன்னும் காலம் எடுக்கலாம். அது நிச்சயமற்றது. நிச்சயமானதை பெற்றுக் கொண்டு அடுத்த படிக்கு முன்னேறுவது புத்திசாலித்தனம். நாம் இன்னமும் இனவாதம் பேசிக்கொண்டு பழைய சிந்தனைகளோடு தொடர்ந்தால் இழப்பு நமக்குத் தானே தவிர பெரும்பான்மையான சிங்களவருக்கு அல்ல.
சில யூடிபர்கள் கருத்துக்களை பகிரும்போது தமிழரிடம் ஒரு மாதிரியும் சிங்களவர்களிடம் இன்னொரு மாதிரியும் சிங்கள அரசியல்வாதிகள் பேசுகிறார்கள் என ஒரு கருத்தை பகிர்ந்து வருகிறார்கள். அக்காலத்தில் இது சாத்தியமாக இருந்தது. ஆனால் இன்று அது சாத்தியம் இல்லை. என்ன பேசுகிறார்கள் என்பன அத்தனையும் சமூக வலைத்தளங்களால் வெளியே வருகின்றன.
சிங்கள தலைவர்கள் எவரும் தமிழில் பேசவில்லை. அவர்கள் வடக்குக்கு போயும் சிங்களத்தில் அல்லது ஆங்கிலத்தில் தான் பேசுகிறார்கள். அதுதான் தமிழில் மொழிபெயர்க்கப்படுகிறது . சில யூ டியூபர்கள் தமிழர்கள் ஆங்கிலேயரோடு ஒரு மாதிரியும் தமிழர்களோடு ஒரு மாதிரி பேசி வந்த சில அரசியல் ஆலோசர்கள் போல , அதே மனோநிலையிலேயே இன்னமும் இருக்கிறார்கள். இவை இன்று சாத்தியமில்லை.
அத்தனையும் நொடி பொழுதில் உலகெங்கும் பரவி விடுகிறது. உதாரணமாக ஒரு சிங்கள அரசியல்வாதி ஒரு ஆங்கில பெரும் பணக்காரரை கொள்ளையர் என சிங்களத்தில் சொன்னது நொடி பொழுதில் உலகெங்கும் பரவியது. அதாவது எந்த மொழியில் பேசினாலும் இன்று அவை உலக மொழிகளில் பரவுவதற்கு அதிக நேரம் எடுப்பதில்லை.
அந்த மாற்றத்தைக் கூட புரியாதவர்களாக சில யூடிபர்கள் இருக்கிறார்கள். அதுதான் அவர்களது அறிவு. அவர்களுக்கு தேவையான , சில இனவாத அரசியல்வாதிகளது கூற்றை மட்டுமே வைத்து அவர்களது இனவாதத்தை நியாயப்படுத்துகிறார்கள். இதனால் அவர்களுக்கு பணம் வரலாம். ஆனால் அவர்கள் செய்வது மாபெரும் துரோகம்.
அதை எதிர்கால சந்ததியினர் அறியத்தான் போகிறார்கள். கடந்த காலங்களில் தவறான முடிவுகளை எடுத்த பல அரசியல்வாதிகளை மக்கள் இன்று சரியாக அடையாளம் கண்டுள்ளார்கள். இன்றும் சில தமிழ் அரசியல்வாதிகள் , அன்றைய சிங்கள இனவாத அரசியல்வாதிகள் போலவே தங்களது அரசியலுக்காக இனவாத கருத்துகளை கேலரிக்காக பேசுகிறார்கள்.
அவர்கள் செய்வது தவறு என அவர்களுக்கு தெரியும். ஆனால் அவர்களது வாக்குக்காக அவர்கள் இனவாதம் பேசி ஆக வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். சிலருக்கு மூன்று மொழிகளும் தெரியும் அவர்களும் இனவாதம் கக்குகிறார்கள். காரணம் வாக்குகள்தான். மக்கள் நேசமோ , மக்கள் பாசமோ , நல்ல தலைமைக்கான சிந்தனையோ எதுவுமே இவர்களிடம் இல்லை.
மக்கள் தவறான வழி செல்லும் போது நேர்மை படுத்துபவன் தான் தலைவன். மக்கள் தன்னோடு இருக்க வேண்டுமென , மக்கள் நோக்கப்படி தன்னை மாற்றிக் கொள்பவன் தலைவன் அல்ல, சுயநலவாதி. உதாரணமாக சிங்கப்பூரின் லீகுவன்யு மக்கள் நினைத்த படி நாட்டை கட்டி எழுப்பியவர் அல்ல. தான் நினைத்தபடி மக்களை மாற்றி நாட்டை கட்டி எழுப்பியவர். இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே.
அதுபோல் ஒரு தலைவர் கூட நம்மிடம் இல்லை. இதை கர்மா என்று கூட சொல்லலாம். லீயின் ஆலோசகர் ஒரு யாழ்பாண தமிழர். சி. இராசரத்தினம். சிலர் 13-வது திருத்தச் சட்டத்தில் போலீஸ் மற்றும் காணி அதிகாரங்களின்படி போலீஸ் என்பதை தர இருக்கிறார்கள், அதாவது டிராபிக் போலீஸ் போல அல்லது நகர போலீஸ் போல என சொல்லி, அவர்களது வேலை தெருவை கூட்டி பெருக்குவது என்பது போல கருத்து ஒன்றை வைப்பதை பார்த்தேன் .
அதை கண்டு சிரிக்கத்தான் முடிந்தது. அவரது அறிவு அவ்வளவுதான். பெடரல் நாடுகளில் போலீஸ் என்பது எத்தனை அங்கங்களாக உள்ளன என்பது குறித்து தெளிவற்றவர்களாக இருக்கிறார்கள். போலீசார் துப்புரவு பணி செய்பவர்கள் அல்ல ஆனால் தேவைப்படும்போது ஐரோப்பிய நாடுகளில் உள்ள போலீசார் துப்புரவு பணிகளையும் செய்வதை அவர்களது கடமைகளில் ஒன்றாக செய்கிறார்கள்.
ஒரு விபத்து நடந்தால் அந்த விபத்து நடந்த பகுதியில் விபத்தை நடக்காதது போல விசாரணைகளின் பின் உடனடியாக துப்புரவு செய்வது ஐரோப்பிய போலீஸாரது கடமைகளில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. எனவே இவை ஒன்றும் நகைப்புக்குரியவை அல்ல அது அவர்களது கடமை. மாகாண சபை வடக்குக்கு கிடைத்த போது அந்த சந்தர்ப்பத்தை தலைமை ஏற்றவர்கள் சரியாக செய்யவில்லை.
பெடரல் (பெடரல் தனிநாடு அல்ல) முறைக்கான பாதையை நோக்கி நடைமுறைப்படுத்தி அரசிடம் நம்பிக்கையை கட்டி எழுப்புவதை விட்டுவிட்டு, அங்கே தனிநாட்டு பிரகடனங்களையே பேசி காலத்தை கழித்தனர். அது ஒரு மோசமான ஒருசெயல்பாடாக தெரிந்தது. அவர்களுக்கு கிடைத்த பணத்தைக் கூட அவர்கள் சரியாக மக்களுக்காக பாவிக்கத் தெரியாதவர்களாக இருந்தார்கள்.
மாகாண சபை மூலம் நல்லதொரு பெயரை அரசிடமோ , மக்களிடமோ சம்பாதிக்க தவறியவர்களாகவே அங்கு இருந்தவர்கள் செயல்பட்டார்கள். அரசின் நன்மதிப்பை கூட அவர்களால் பெற முடியவில்லை. இது ஒரு பலவீனமான செயல்பாடு. அதுபோல இனியும் தவறானவர்களை மக்கள் தேர்வு செய்வது குறித்து சிந்திக்க வேண்டும்.
மக்களுக்கு சேவை செய்யக்கூடிய, செயல்படக்கூடிய நபர்களை மக்கள் தேர்வு செய்ய வேண்டும். பேச்சாளர்களை அல்லது யாரோடாவது இருந்தார்கள் என்பதால் அவர்களை தேர்வு செய்ய வேண்டும் என நினைப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படி ஒரு மாற்றம் ஏற்படாது போனால் கடைசி வரை அந்த மக்கள் எந்த இனமாக இருந்தாலும் அவர்கள் இன்னலுக்கு ஆளாவதை தவிர்க்க முடியாது தன் தலையில் தானே மண்ணை வாரி கொட்டிக் கொள்வதாகவே அது இருக்கும்.