சுகாதார சேவையின் மனித மற்றும் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை
நாடளாவிய ரீதியில் சுகாதார சேவையின் மனித மற்றும் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதற்கும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார செயலாளர், வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
தரமான சேவையை பெற்றுக் கொடுக்க ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படும்.
சுகாதாரக் கல்வி, போஷாக்கு, உளநலம், தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் தொற்றாநோய்கள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இலங்கையின் இலவச சுகாதார சேவையை முன்னேற்றுவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுக்களின் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உலகில் வளர்ந்த நாடுகளில் காணப்படும் சுகாதார சேவைக்கு நிகரான சுகாதார சேவையை உருவாக்கும் நோக்கில் இந்த நிபுணர் குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இந்த நிபுணர் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம், எதிர்காலத்தில் இலங்கை மக்களுக்கு தரமான, வழக்கமான சுகாதார சேவைகளை வழங்குவதற்கு தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (22.12.2023) முதன்முறையாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை மாத்திரமன்றி பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த குழு ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.