ரிஷாட் மனைவி எடுத்த அதிரடி நடவடிக்கை
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டமை சட்ட விரோதமானது என குறிப்பிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டை ரிஷாட் பதியுதீனின் மனைவி, ரியாஜ் பதியுதீனின் மனைவி ஆகியோர் சட்டத்தரணி ஆர்ணல்ட் பிரியந்தன் ஊடாக முன் வைத்துள்ளனர்.
கடந்த 24 ஆம் திகதி கொழும்பு 7, பெளத்தாலோக்க மாவத்தையில் உள்ள வீட்டில் வைத்து தனது கணவரான ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி முறைப்பட்டில் குறிப்பிட்டுள்ள நிலையில், அன்றைய தினம் தனது கணவர் வெள்ளவத்தை, பெட்ரிகா வீதியில் உள்ள வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதாக ரியாஜ் பதியுதீனின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.
கைதான இருவரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் , ரிஷாட் மற்றும் ரியாஜ்ஜின் கைதும், தடுத்து வைத்தலும் சட்ட விரோதமனது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அரசியல், மதம் மற்றும் இன ரீதியிலான கைது நடவடிக்கையாகவே, குறித்த இருவரின் கைதும் உள்ளதாக தமது முறைப்பாட்டில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ரிஷாட் பதியுதீன், தற்கொலை குண்டுதாரி ஒருவரின் குலோசஸ் எனும் செப்புத் தொழிற்சாலைக்கு சட்ட திட்டங்களுக்கு புறம்பாக அதிக செப்பினை விநியோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்படும் நிலையில், அது அடிப்படையற்றது என முறைப்பாட்டாளர் ஆவணங்களையும் இணைத்து கூறியுள்ளார். அத்துடன் செப்பு விநியோகம், தனது கணவர் அமைச்சராக இருந்தபோது அவரது அமைச்சின் கீழ் இடம்பெற்றாலும் அதில் அமைச்சருக்கு தலையீடு செய்ய முடியாது என முறைப்பாட்டாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி செயலகம் ஊடாக குளோசஸ் நிறுவனத்துக்கு செப்பு வழங்க முன்வைக்கப்பட்டிருந்த பரிந்துரை தொடர்பிலும் முறைப்பாட்டாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ரியாஜ் பதியுதீன் சார்பிலான முறைப்பாட்டில், அவர் ஏற்கனவே இதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 6 மாதங்களுக்கு மேல் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதன் பின்னர் சாட்சியங்கள் இல்லை என விடுவிக்கப்பட்டதாகவும் தற்போது மீளவும் அதே விடயங்களை கூறி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டாளர் தமது கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.