காலி - கொழும்பு பிரதான வீதியில் விபத்து: வயோதிபர் பலி!
காலி - கொழும்பு பிரதான வீதியில் பலப்பிட்டிய பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (06) காலை இடம்பெற்றுள்ளது.
விபத்திற்கான காரணம்
பலப்பிட்டிய பஸ் தரிப்பிடத்தில் பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று அதே திசையில் பயணித்த சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது சைக்கிளில் பயணித்த வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய வயோதிபரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.