நாளை ஆடிப்பிறப்பு; தமிழர்களின் விசேட பண்டிகை நாள்! சுவையான ஆடிக்கூழ் செய்யும் முறை!
ஆடிப்பிறப்பு சைவத் தமிழ் மக்களினால் ஆடி மாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். அந்தவகையில் நளைய தினம் (17) ஆடிப்பிறப்பு நன்னாளாகும்.
இந் நாளில் தமிழ் மக்கள் ஆடிக்கூழ் , கொழுக்கட்டை என்னும் உணவு வகைகளை விசேடமாகச் தயாரித்து குடும்ப விருந்தாக உண்டு மகிழ்தல், விசேட வழிபாடு செய்தல், உற்றார் உறவினர்களுக்கு இவ்வுண்டி வகைகளை வழங்கி நல்லுறவைப் பேணல் என்பன வழக்கமாகும்.

அனைத்து இடங்களிலும், தமிழர்களின் பண்டிகை
ஆடிப்பிறப்பானது வீடுகளில் மாத்திரமன்று ஆலயங்கள், பாடசாலைகள், வேலை செய்யும் அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும், தமிழர்களின் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலமாகும். இது தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகும். அடுத்து சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் காலம் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் தட்சணாயண காலமாகும்.
இது தேவர்களுக்கு இராப்பொழுதாகும். தட்சணாயணத்தின் தொடக்கதினம் ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலம் கோடைகால வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாகப் பெருகும் இயல்புடையது.
அந் தவகையில் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என யாழ்ப்பாணம் மானிப்பாய், நவாலியூர் சோமசுந்தரப் புலவர் இயற்றிய பாடல் தமிழ் மக்களிந் ஆடிப்பிறப்பு கொண்டாத்தின் இனிமையை எடுத்து சொல்கின்றது.

சுவையான ஆடிக்கூழ் செய்யும் முறை
ஆடிக்கூழ் தேவையான பொருட்கள்
750 கிராம் பனங்கட்டி 1 ¼ கப்
சிவப்பு பச்சை அரிசி ½ கப்
முழுப் பயறு ½ கப்
வறுத்த உளுத்தம் மா ½ கப்
தேங்காய் சொட்டு , தேங்காய்ப்பால் , தேவையான அளவு தண்ணீர் , சிறிது மிளகு, தேவையான அளவு உப்பு
செய்முறை,
அரிசியை குறைந்தது 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அடுத்ததாக தண்ணீரை வடித்து, வடியில் வார விடவும். வாரவிட்ட அரிசியை மிக்சியில் அரைத்து, அரிதட்டால் அரித்து எடுக்கவும்( மிளகு சேர்க்க விரும்பினால் அரிசியுடன் சேர்த்து அரைக்கவும்). மாவை இரு பங்குகளாக பிரித்து வைக்கவும்.

தேங்காயில் சின்னச் சின்ன சொட்டுகளாக ½ கப் சொட்டுகள் வெட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பனங்கட்டியுடன் 1 லீட்டர் தண்ணீர் சேர்த்து, கரையும் வரை கொதிக்க விடவும். முழுப்பயரை வறுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 2 லீட்டர் தண்ணீர் விட்டு, கொதித்ததும், வறுத்த பயறைச் சேர்த்து அவிய விடவும்.
பயறு அரைப்பங்கு அவிந்ததும் அதனுள் பனங்கட்டிப்பாணியை வடித்து விடவும். அரைப்பங்கு அரிசிமாவுடன் உளுத்தம்மா, 1 சிட்டிகை உப்பு சேர்த்துக் கலந்து, 1 கப் தண்ணீர் விட்டு கட்டிகள் இல்லாமல் கரைத்து வைக்கவும்.

மீதமுள்ள மாவில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, கொதித்த பனங்கட்டிப்பாணியை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் குழைத்து எடுத்து, அதனை சிறிய சில்லுகளாக தட்டவும் அல்லது உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
பயறு அவிந்தவுடன் அதனுடன் தட்டிய சில்லுகள் அல்லது உருட்டிய மா உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்த்து அவியவிடவும். அதனுடன் தேங்காய்ப்பால் மற்றும் தேங்காய்ச் சொட்டுகளையும் சேர்த்து அவியவிடவும்.
சில்லுகள் / உருண்டைகள் அவிந்ததும், உளுத்தம்மா கரைசலை விட்டு கைவிடாமல் கிண்டவும். கொதித்து இறுகத்தொடங்கவும் அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும். சுவையான ஆடிக் கூழ் தயார்.