ஆடி அமாவாசையில் எள்ளும், தண்ணீரும் இரைப்பது இதற்காகவா?
ஆடி அமாவாசையில் பித்ருகளின் ஆசியை பெறுதற்கு முக்கியமான மூன்று விஷயங்களை செய்ய வேண்டும்.
அவை தர்ப்பணம் கொடுப்பது, எள்ளும் - தண்ணீரும் இரைப்பது மற்றும் காகத்திற்கு எள் கலந்த சாதம் அல்லது விரதத்திற்கான சமைத்த உணவு ஆகியவற்றை படைக்க வேண்டும்.
இவற்றில் எள்ளும், தண்ணீரும் எதற்காக இரைக்கப்படுகிறது. இதற்கு எந்ந அர்த்தம் என்பது பலருக்கும் தெரியாது.
இப்படி செய்யும் பித்ருகடன் நேரடியாக முன்னோர்களை சென்று அடையும் என்பது நம்பிக்கை.
அமாவாசை தினங்களில் முன்னோர்களை நாம் விரதம் இருந்து வழிபட வேண்டும்.
அதிலும் ஆடி அமாவாசை போன்ற நாட்களில் விரதம் இருந்து தண்டிப்பாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்று கூறுவார்கள்.
தர்ப்பணம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்
புனித நதிகளில் நீராடி, நீர் கரைகளில் தர்ப்பணம் கொடுப்பது நம்முடைய பாவங்களை மட்டுமின்றி நம்முடைய முன்னோர்களின் பாவங்களையும் போக்கும் என்பார்கள்.
நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் வீட்டில் கண்டிப்பாக எள்ளும், தண்ணீரும் இரைக்க வேண்டும் என சொல்லப்படுகிறது.
இது பல அமாவாசைகளில் தர்ப்பணம் கொடுத்த புண்ணிய பலனை பெற்றுத் தரும். வீட்டில் அகலமான பாத்திரம் அல்லது தாம்பாலம் வைத்து, கணவர் கையில் எள் வைத்து, முன்னோர்களை நினைத்து இதை செய்ய வேண்டும்.
குலதெய்வம், கோத்திரம், மூன்று தலைமுறை முன்னோர்களின் பெயர்களை சொல்லி முன்னோர்களின் ஆத்மா இதை ஏற்று, நமக்கு ஆசி வழங்க வேண்டிக் கொள்ள வேண்டும்.
எள்ளும் தண்ணீரும் இரைக்கும் முறை
மனைவி தண்ணீர் ஊற்றி, உள்ளங்கையில் வைத்திருக்கும் எள்ளை ஆட்காட்டி விரல் மற்றும் பெருவிரலுக்கு இடையில் வழிந்தோடும் படி செய்ய வேண்டும்.
இதுவே எள்ளும் தண்ணீரும் இரைக்கும் முறையாகும். இந்த தண்ணீரை யாருடைய காலும் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும்.
இந்த எள்ளும் தண்ணீரும் பித்ரு லோகத்தில் இருக்கும் நம்முடைய முன்னோர்களை சென்று சேரும் என்பது நம்பிக்கை.
எள்ளும் தண்ணீரும் இரைப்பது ஏன்?
எள் என்பது சனீஸ்வர பகவானுக்கு உரிய தானியம் ஆகும். தண்ணீர் என்பது சந்திரனுக்கு உரிய திரவம் ஆகும்.
இவை இரண்டையும் சேர்த்து கொடுப்பதால், சனி - சந்திரன் சேர்ந்து இதற்குரிய பலனை பித்ரு லோகத்தில் இருக்கும் நம்முடைய முன்னோர்களுக்கு சென்று சேர்ப்பார்கள் என்பது நம்பிக்கை.
அதோடு எள் என்பது மகா விஷ்ணுவின் அம்சமாகும். இதை தானம் செய்வதை போல் தண்ணீருடன் சேர்ந்து இரைப்பது பித்ருலோகத்தில் இருக்கும் நம்முடைய முன்னோர்களுக்கு வைகுண்ட பதவி கிடைக்க வழி வகை செய்யும்.