மருமகளின் மேக்கப் கிட்டை பயன்படுத்திய மாமியார்; விவாகரத்துக்கு சென்ற பெண்!
இந்தியா - ஆக்ராவில், மாமியார் தனது மேக்கப் கிட்டை பயன்படுத்தியதைக் காரணமாகச் சொல்லி விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ராவின் புறநகர் பகுதியான மல்புராவில் வசித்து வரும் சகோதரர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக இருவரும் சகோதரிகளாகப் பார்த்து திருமணம் செய்து கொண்டனர்.
விவாகரத்து செய்தே தீருவேன்
இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன் மூத்த மருமகள் பயன்படுத்தும் மேக்கப் கிட்டை, மாமியார் அவரது அனுமதி இல்லாமல் எடுத்துப் பயன்படுத்தியுள்ளார்.
மேலும், நவீன உடைகள் அணிந்து வீட்டிற்குள் வலம் வந்துள்ளார். இதனை மூத்த மருமகள் பார்த்துவிட்டு, மாமியாருடன் சண்டையிட்டதை அடுத்து மாமியார் தனது மகனிடம் சம்பவத்தை கூறியுள்ளார். இதுதொடர்பாக கணவன் - மனைவிக்குள் சண்டை ஏற்பட்டு பொறுமை இழந்த கணவன், மனைவியைத் தாக்கியுள்ளார்.
அத்துடன், சகோதரிகள் இருவரையும் தாய் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மூத்த மருமகள் தற்போது விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார்.
இதனையடுத்து, குடும்ப நல ஆலோசனைக்குழுவினரிடம் இந்த வழக்கு சென்ற போது, வழக்கு குறித்து விசாரித்த ஆலோசகர், அந்த பெண்ணிற்கு அறிவுரைகள் வழங்கினார்.
ஆனால்அந்த பெண், அம்மாவின் பேச்சைக் கேட்டு கணவன் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும் அதனால், கட்டாயம் விவாகரத்து செய்தே தீருவேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில் மாமியார் தனது மேக்கப் கிட்டை பயன்படுத்தியதற்காக கோபப்பட்டு மருமகள் விவாகரத்து வரைக்கும் போன விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.