பிரசாதத்தில் குடியிருந்த குட்டி பாம்பு ; பக்தர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
பக்தர்களுக்கு வழங்கிய பிரசாதத்தில் உயிரிழந்த குட்டி பாம்பு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி, ஓசூர் தேர்ப்பேட்டை பகுதியில் உள்ள மலை மீது மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வரர் கோயில் உள்ளது.
பிரசாதத்தில் பாம்பு
இக்கோயில் வளாகத்தில் பிரசாதம் விற்பனை கடை உள்ளது. இங்கு புளியோதரை, தயிர்சாதம் உள்ளிட்ட பிரசாதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெங்களூவைச் சேர்ந்த மதனிகா என்ற பக்தர் பிரசாத கடையில் வாங்கிய புளியோதரை பிரசாதத்தில் உயிரிழந்த நிலையில் குட்டி பாம்பு இருந்துள்ளது.
உடனே இதுதொடர்பாக கோயில் செயல் அலுவலர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சாமிதுரை பேசுகையில், 'கோயிலில் பிரசாதம் விற்பனை செய்ய திருச்சியைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் ஒப்பந்தம் பெற்றுள்ளார்.
இங்கு விற்பனை செய்யப்பட்ட புளியோதரையில் குட்டி பாம்பு உயிரிழந்த நிலையில் இருந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, விற்பனைக்கு வைக்கப்பட்ட பிரசாதங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு, அழிக்கப்பட்டது.
மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்' என தெரிவித்துள்ளார்.