கொழும்பில் சுத்துமாத்து கோடீஸ்வர தமிழ் வர்த்தகருக்கு சிக்கல்
கொழும்பில் பல மோசடி மற்றும் போலி வழக்குகளில் நீதிமன்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தமிழ் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவருக்கு எதிராக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
கொழும்பு 06 ஐச் சேர்ந்த கணேஷ் என்றழைக்கப்படும் நடராஜா கனராஜா என்ற கோடீஸ்வர வர்த்தகரிடம் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
பல மோசடி வழக்கு
இலங்கையின் முன்னணி தனியார் நிறுவனமொன்றின் நிர்வாக சபை உறுப்பினராக இருந்து, போலி ஆவணங்கள் தயாரித்து அந்த நிறுவனங்களின் வாகனங்களை விற்பனை செய்து பல மோசடி வழக்குகளில் சந்தேக நபர் ஈடுபட்டுள்ளார்.
பாபிலியான பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த வீரசிங்க முதலிகே ரொஷான் வீரசிங்க, அவர் பணிப்பாளராக இருந்த தனியார் நிறுவனத்தின் பங்குகளை பொய்யான ஆவணம் தயாரித்து விற்பனை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எஸ்.எம். சஜித் முன் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் நீதிமன்றில் அறிக்கை செய்துள்ளது.