நாட்டின் அரசாங்க மருத்துவமனைகளில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்
நாட்டில் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் டிஜிட்டல் மயமாக்குவதுடன் குறுகிய காலத்தில் மக்களுக்கு உயர் தரமான சிகிச்சை சேவைகள் மற்றும் உயர்ந்த பராமரிப்பை வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நவீனமயப்படுத்தப்படும் வைத்தியசாலைகள்
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்
கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் அறுவை சிகிச்சை பிரிவு, மாதாந்த சிகிச்சை பிரிவு, ஆய்வகங்கள், கதிரியல் பிரிவு, உள் நோயாளர் பிரிவு மற்றும் வெளிநோயாளர் பிரிவு என அனைத்து பிரிவுகளும் தற்போது நவீனமயப்படுத்தப்பட்டு முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு தரப்படுத்தப்பட்ட ஆய்வக சேவையை வழங்கும் நோக்குடன் கொழும்பு சிறுவர் வைத்தியசாலை ஆய்வகத்தின் திசு அறிவியல் பிரிவு, இலங்கை அங்கீகார வாரியத்தால் (SLAB) ஆய்வகங்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரத்திற்காக சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் விண்ணப்பித்து.
அதற்கமைய அரச மருத்துவமனையில் உள்ள ஆய்வகம் தரப்படுத்தலுக்கு உட்படுவது இதுவே முதல் சந்தர்ப்பமாகும். சகல பொது சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்கி பொதுமக்களுக்கு மிகவும் வசதியான மற்றும் திறமையான சேவையாக மாற்றுவதே தற்போதைய அரசாங்கத்தின் குறிக்கோளாகும்.
நாட்டில் உள்ள அரச மருத்துவமனை வளாகத்தை பொறியியல் மற்றும் கட்டிட வடிவமைப்பைப் பயன்படுத்தி, ஆக்கப்பூர்வமான மற்றும் கவர்ச்சியான இடமாக மாற்ற அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்றும் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.