பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு வலம்புரிச் சங்குகளுடன் ஒருவர் கைது
மன்னார் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு வலம்புரி சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் - சாந்திபுரம் பகுதியில் வைத்து குறித்த நபரை நேற்று (24.12.2023) இரவு மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் சாந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சந்தேகநபர் குறித்த நான்கு வலம்புரிச் சங்குகளையும் விற்பனை செய்யும் நோக்கில் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று (24) இரவு சாந்திபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு வலம்புரி சங்குகளை மன்னார் பொலிஸ் விசேட பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் மற்றும் மீட்கப்பட்ட நான்கு வலம்புரி சங்குகளும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.