சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் வெளியிட்டுள்ள கருத்து
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துமென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
நீடிக்கப்பட்ட நிதி வசதியின் (Extended Fund Facility) கீழ், இலங்கைக்கான இரண்டாவது தவணை கடன் வசதியை சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) பெற்றுக்கொடுத்துள்ளமை திருப்தியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தமது ‘X’ தளத்திலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இந்த நடவடிக்கை இலங்கைக்கு ஒரு முக்கியமான படியாகும்.
இது, இலங்கையின் முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல நிலையான சீர்திருத்தங்கள் மற்றும் மேம்பட்ட நிர்வாகத்துக்கான வழிகாட்டலாகவும் அமைந்துள்ளது.
பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கான இலங்கையின் பாதைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும்.” என்றும் தூதுவர் ஜுலி சங் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் இரண்டாம் தவணை கொடுப்பனவாக இலங்கைக்கு 337 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது.
இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை, கடந்த மார்ச் 20இல், அனுமதி வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.