ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணிலுக்கு சென்ற கடிதம்!
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்து வைக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்து ஜனாதிபதி ரணிலுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னேஸ் கலாமார்ட் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு இது குறித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த கடிதத்தில்,
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு நபர்கள் குறித்து கரிசனை வெளியிட்டு நாங்கள் இந்த கடிதத்தை எழுதுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முக்கிய மாணவர் தலைவர்கள் துன்புறுத்தப்படுவது குறித்து நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம் என குறிப்பிட்ட அவர், இது இலங்கையில் மனித உரிமைகள் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொது ஆர்ப்பாட்டம் மீது பொலிஸாரின் நடவடிக்கை குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம் என்றும் ஜனாதிபதிக்கு அவர் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.